இந்தியா

38 கட்சிகள் பங்கேற்கும் ஆளுங்கட்சிக் கூட்டணி ஆலோசனை கூட்டம்!

Malaimurasu Seithigal TV

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. 

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. இதனை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் தற்போது கூட்டணியில் உள்ள மற்றும் புதிதாக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் உள்ளிட்டவையும் பங்கேற்கும். சமீப வாரங்கள் மற்றும் மாதங்களில் புதிதாக கூட்டணிகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாஜக, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அக்கட்சி கூட்டணியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியேறிய சுகேல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பார் மீண்டும் அந்த கூட்டணியில் இணைந்து உள்ளார். இவரை போன்று பீகாரில் சிராக் பஸ்வானையும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்படி நட்டா கேட்டு கொண்டு உள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற உள்ள சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது, அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.