இந்தியா

ராணுவத்தில் சேர விருப்பமுள்ளவரா... தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!!

Malaimurasu Seithigal TV

ராணுவத்தில் உடற்தகுதி தேர்வு முடிந்த பின் எழுத்து தேர்வு நடைபெறும் என்ற முறை மாற்றப்பட்டு முதலில் எழுத்து தேர்வும் பின்பும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கர்னல் பத்ரி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம்:

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில், கர்னல் பத்ரி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், ராணுவ ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

கணினியில் தேர்வு:

மேலும், ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை நன்கு அறிந்துகொள்ள உதவும் வகையில், 'பதிவு செய்வது எப்படி' மற்றும் ஆன்லைன் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி' பற்றிய கல்வி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அனைவரும் பங்கேற்கலாம்:

பதிவேற்றம் மற்றும் யூடியூப்பில் அனைத்துப் பிரிவினருக்கும் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதோடு, விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்துகொள்ளலாம் என்றும் பேசியுள்ளார். 

தேர்வு கட்டணம்:

ஆன்லைன் தேர்வுக்கான கட்டணம் ஒரு தேர்வருக்கு ரூ500/-ஆகும், அதில் 50% செலவை ராணுவமே ஏற்பதோடு, மீதமுள்ள ரூ. 250/- மட்டும் தேர்வர்கள் செலுத்த வேண்டும் என்றும், சந்தேகங்களுக்கு joinindianarmy@gov.in இணையதளத்திலும், jiahelpdesk2023@gmail.com மின்னஞ்சலிலும் மற்றும் 7996157222 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.