தொழில்நுட்பம்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி.சி 56 ராக்கெட்...!

Tamil Selvi Selvakumar

பி.எஸ்.எல்.வி சி 56 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஏழு செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ  நமது நாட்டிற்கு தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வணிக ரீதியாகவும் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான டிஎஸ் - சார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோவுடன் சிங்கப்பூரின் என் எஸ் ஐ எல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடிய 352 கிலோ எடையுடைய டி எஸ் - சார் செயற்கைக் கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி 56 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுண்டன் சனிக்கிழமை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து கவுண்டன்  முடிவடைந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் டிஎஸ் - சார் செயற்கைக்கோள் உள்பட ஏழு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி 56 ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட்டது.

முதன்மைச் செயற்கைக் கோளான டி எஸ் சார் செயற்கைக் கோளானது இரவு பகல் மட்டுமின்றி அனைத்து பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், வெலாக்ஸ் ஏம், ஆர்கேட், ஸ்கூப், நியூலயன், கலாசியா, ஆர்ப் - 12 ஸ்பைடர் ஆகிய ஆறு செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டன.  இவற்றுள் அரியலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்த மூன்று நானோ செயற்கை கோள்களும் அடங்கும்.

ராக்கெட் செலுத்தப்பட்டு 23 நிமிடங்களுக்குப் பிற்கு 535 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செயற்கைக் கோள்கள் பிரிந்து சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. 

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  இந்த ஆண்டு இறுதிக்குள் ககன்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மற்றோரு ராக்கெட் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான செயற்கைக் கோள்கள் அடுத்த ஆண்டு செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை செலுத்தியிருப்பது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். இது  பிஎஸ் எல் வி ராக்கெட்டின் 58 ஆவது வெற்றி.கரமான பயணமாகும்