மற்றவை

'ஸ்லீப் மோட்' நிலைக்கு சென்றுள்ள பிரக்யான் ரோவர் - இஸ்ரோ அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தொிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய 'பிரக்யான்' ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. இந்நிலையில் நிலவில் 14 நாட்கள் பகல் பொழுது முடிவடைந்துள்ளது. அடுத்த 14 நாட்கள் இரவுப்பொழுதாக இருக்கும் என்பதால் ரோவர் இனி 'ஸ்லீப் மோட்' என்ற நிலைக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நிலவில் 'பிரக்யான்' ரோவர் அதன் பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும், தற்போது அது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு 'ஸ்லீப் மோட்' நிலைக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.