நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த 28-ம் தேதி சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், சீமான் மீது திட்டமிட்டே விஜயலட்சுமி அவதூறு பரப்பி வருவதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க தலைவர் அன்பு தென்னரசு தலைமையில் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தனர். அதேபோல், நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அஞ்சம்மாள் தலைமையில் கட்சியினர் காவல்துறையில் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிக்க : தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு...!
தஞ்சை மாவட்டத்தில் சீமான் மீது பொய் புகார் அளித்தும், சமூக வலைதளங்களில் சீமானின் தாயார் மற்றும் இயக்க பெண்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் வீரலட்சுமி ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
திருவண்ணாமலையிலும் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் செயல்படும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.