இந்தியா தலைமையில் ஜி20 உச்சிமாநாடானது உலகத் தலைவர்கள் பங்கேற்புடன் டெல்லியில் கோலாகலமாகத் தொடங்கியது.
ஜி20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடானது இந்தியா தலைமையில் இன்றும், நாளையும் டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகளின் தலைவர்கள் - சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி-ஜின்பிங் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தலைநகர் முழுவதிலும் உச்சகட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, வங்கதேசப் பிரதமர் ஷீக் ஹசீனா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி உள்ளிட்டோரை பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடானது தொடங்கியது. நிகழ்ச்சி நிரல் தொடங்குவதற்கு முன்னதாக மொராக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இதையடுத்து ஆப்பிரிக்காவை ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பினராக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி20 -ல் முதன் முறையாக பங்கேற்ற ஆப்பிரிக்க யூனியன் குழுத்தலைவர் அசாலி அசோமணியை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இந்நிலையில் காலநிலை மாற்றம் தலைப்பின் கீழ் முதல் அமர்வானது தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.