”இதை வெளியே சொல்லி விடாதீர்கள்;அது தலைக்குனிவு தான்” - ப.சிதம்பரம் ஆவேசம்

”இதை வெளியே சொல்லி விடாதீர்கள்;அது தலைக்குனிவு தான்” - ப.சிதம்பரம் ஆவேசம்
Published on
Updated on
1 min read

தேவகோட்டையில் அரசுமேல்நிலைப்பள்ளி இல்லை என்று வெளியே சொல்லி விடாதீர்கள் அது தலைக்குனிவு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  திறந்து வைத்தார். அப்போது எங்கிருந்து எல்லாம் மாணவர்கள் வருகிறார்கள் என்று கேட்ட சிதம்பரத்திடம், கண்ணங்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

அதற்கு தேவகோட்டை நகரில் மேல்நிலைப் பள்ளி  இல்லையா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்ப, இல்லை என ஆசிரியர்கள் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே, அங்கிருந்த எம்.எல்.ஏவிடம் ஏன் தேவகோட்டையில் மேல்நிலைப்பள்ளி இல்லை என கேள்வியெழுப்பியதும், தேவகோட்டையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேவகோட்டையில் அரசுமேல்நிலைப்பள்ளி இல்லை என்பதை வெளியில் சொல்லி விடாதீர்கள்; சொன்னால் தலைக்குனிவு தான் என்று சிதம்பரம் கூறினார். இதனால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், தேவகோட்டை நகரில் இதுவரை அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com