உச்சநீதிமன்ற உத்தரவை மீறி காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதற்காக நடிகர் விஜயின் கார் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் தெரிந்து கொள்ள | தொடரும் பிராங்க் வீடியோ அட்டூழியம்.. யூடியூப் சேனல்களுக்கு காவல்துறை எச்சரிகை
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த 20 ஆம் தேதி இயக்க நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதியாக நடிகர் விஜய் கலந்துகொண்டு இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். நடிகர் விஜய் வருகை குறித்து தகவல் அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வந்த காரை வீடியோ எடுத்த பொதுமக்களில் ஒருவர் அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததுடன், சென்னை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தை தனது பதிவில் குறிப்பிட்டு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். குறிப்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி நடிகர் விஜய் தனது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாகவும், வி.ஐ.பி-க்கள் மட்டும் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் தெரிந்து கொள்ள | மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா சமந்தா...சோக நிலை...
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய நடிகர் விஜயின் கார் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை போக்குவரத்துப் போலீசார் அவருக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். மேலும், அபராதம் விதிக்கப்பட்டதற்கான செலானை சமூக வலைதளத்தில் புகார் அளித்த நபரின் பதிவுக்கு கீழ் பதிவிட்டு சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை சென்னை காவல்துறை உணர்த்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.டி.ஜி.பி அந்தஸ்து உடைய காவல்துறை அதிகாரியின் வாகனம் ஒருவழிப்பாதையில் பயணித்ததற்காக அந்த வாகனத்தை ஓட்டிய காவலர் மீது வழக்கு பதிந்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.