கீழடி அருங்காட்சியக பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கீழடி பணிகள்:
கீழடியில் கடந்த தமிழக தொல்லியல் துறை சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கீழடி அருங்காட்சியகத்திற்கு முதலில் 12 கோடியே 21 லட்ச ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் பணிகள் நிறைவடையும் என கூறி அதன்படி பணிகள் நடந்து வந்தன.
திட்ட மதிப்பீடு உயர்வு:
இந்நிலையில் உலக தரத்திற்கு இணையாக பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்ததை தொடர்ந்து திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 18 கோடியே 81 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. வரும் மார்ச் 5ம் தேதி மதுரை வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளதால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பத்து கட்ட தொகுதிகள்:
முதலமைச்சர் வருகையை ஒட்டி அருங்காட்சியகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரவேற்பறை, மினி தியேட்டர், உள்ளிட்ட பத்து கட்டட தொகுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஆறு தொகுதிகளில் இரண்டு தளங்களில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இரும்பு, சுடுமண், தங்கம், அலங்கார பொருட்கள், தந்த பொருட்கள், விவசாய பொருட்கள், கால்நடை, கல்வியறிவு உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.
என்னென்ன?:
ஒவ்வொரு கட்டட தொகுதிகளிலும் 165 செ.மீ அகலமுள்ள மெகா சைஸ் கலர் எல்இடி டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரத்தில் அகழாய்வு பணிகள், அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள், அவற்றின் காலம், பயன்பாடு, உள்ளிட்ட காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் 54 புஷ்பேக் வசதியுடன் கூடிய மினி குளிரூட்டப்பட்ட தியேட்டரும் கட்டப்பட்டுள்ளது.
இதில் அகழாய்வு பணிகள், தொல்லியல் ஆய்வாளர்கள், அறிஞர்கள் பேட்டிகள் ஒளிபரப்பட உள்ளன. இ வற்றை பார்த்த பின் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பொருட்களை அந்த கால உணர்வுடன் பார்வையாளர்கள் கண்டு மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து மக்கள் அதை பார்வையிட மிக ஆவலுடன் எதிர்பாத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: ”முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதை விட ஜனநாகயத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று...” கி.வீரமணி புகழாரம்!!!