முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதை விட ஜனநாகயத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.
பெரியார் திடலில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக சென்னை பெரியார் திடல் வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
கி. வீரமணி வாழ்த்து:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ”தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகன் ஸ்டாலினின் பிறந்தநாள். மகளிர் கல்வி, மருத்துவ கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இது தமிழ்நாட்டோடு நின்றுவிடாமல் திராவிட மாடல் நாடு முழுவதும் பரவ வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சியை எதிர்ப்பதற்கான முன்னோட்டமாக இன்று மாலை முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.” எனப் பேசியுள்ளார்.
மேலும்,”மற்ற இடங்களில் தேர்தல் நேரங்களில் அரசியல் கூட்டணியாக மட்டுமே உள்ளது. திமுக கூட்டணி தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைகளுக்காக சேர்ந்த கூட்டணி என்பதால் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. சமூக நீதி, சுயமரியாதை, மதச்சார்பின்மை பின்பற்றும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை தாண்டி நாடாளுமன்ற தேர்தலில் பயன்பட வேண்டும். முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதை விட ஜனநாகயத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று. திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் அதிகரிக்கலாமே தவிர குறையாது. மற்ற கூட்டணி கட்சியில் சில கட்சிகள் காணாமல் போகலாம்.” என தெரிவித்துள்ளார் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
இதையும் படிக்க: முடிவடைந்த சட்டமன்ற தேர்தல்... விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!!!