சிற்றார் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக சுற்றி திரிவதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்ட வனப்பகுதியான சிற்றாறு வன பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலோன் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.
ரப்பர் பால் வடிப்பு வேலை முடிந்த பிறகு தங்களது வீடுகளில் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து அவற்றை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 ம் தேதி சிலோன் காலனி குடியிருப்பு பகுதியின் பின்புறம் அமைக்கபட்டிருந்த ஆடு கொட்டகையினுள் புகுந்த புலி ஒன்று ஆட்டை அடித்து தூக்கி சென்றுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் காட்டுப்பகுதிக்கு சென்ற போது மலை மீது வைத்து புலி ஆட்டினை திண்பதை கண்டு அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஆடு கொட்டகை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தினர். இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அதே பகுதியில் உள்ள மற்றொரு கொட்டகையினுள் புகுந்த புலி ஐந்து ஆடுகளை அடித்து கொன்று சென்றது. தொடர்ந்து அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகளை இரண்டு மூன்று நாட்கள் இடைவெளியில் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சமடைந்து பால் வடிப்பு தொழிலுக்கும் செல்வதை நிறுத்தியதோடு புலியை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் புலி அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இரும்பு கூண்டு ஒன்றை வைத்து கண்காணித்து வந்தனர். இருந்தும் புலி கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும் கூண்டில் சிக்காமலும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இதனையடுத்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய வனத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சிற்றாறு பகுதியில் முகாமிட்டு புலியை கண்காணித்து வருவதோடு புலியின் நடமாட்டம் மற்றும் ஓய்வு எடுக்கும் பகுதிகளை கண்டறிவதற்காக மாவட்ட வன அலுவலர் தலைமையில் ட்ரோன் கேமராக்களை அடர்ந்த வனப்பகுதியின் மேல் பரப்பில் பறக்க விட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
தொடர்ந்து மலைவாழ் மக்களின் கால்நடைகளை அடித்து தின்று வரும் புலி ஊர் மக்களையும் அடித்து தின்பதற்குள் புலியை பிடித்து மக்களை அச்சத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.