சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும்16 சுரங்கப் பாதைகள் பராமரிப்பில் உள்ளன. அதில் ஒன்று சைதாப்பேட்டை தொகுதியின் உட்புற பகுதிகளையும் அண்ணாசாலையும் இணைக்கும் முக்கிய சுரங்கப்பாதையாக உள்ள சி.பி.பவளவண்ணன் சுரங்கப்பாதை.
கார், பைக் வாட்டர் வாஷ் ஃப்ரீ சர்வீஸ், கோடையில் மழை, காலையில் அலுவலகம், பள்ளி செல்வோர்கள் சிரமமின்றி குளிப்பதற்கு அரசு செய்து கொடுத்துள்ள பிரத்யேக வசதி என இப்படி டிசைன் டிசைனாக கிண்டல் செய்து வருகின்றனர் இந்த சுரங்கபாதையை கடந்து செல்வோர்.
இதிலென்ன கூடுதல் ஸ்பெஷல் என்றால் சாமானியர்கள் மட்டும் அல்ல இந்த வழியாக தினந்தோறும் பயணிக்கும் அமைச்சர் முதல் அரசு அதிகாரிகள் என பல முக்கிய நபர்களும் இதனை பார்த்து கொண்டே தான் கடந்து செல்வது தான் வேடிக்கை.
இந்த சுரங்கபாதையில் கொட்டும் நீரால் வாகன ஓட்டிகள் பெரும் விபத்துக்களில் சிக்குவது மட்டும் அல்லாமல் குறைந்தது 5 முதல் 10 வாகன ஓட்டிகளாவது வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது.
இன்று நேற்றல்ல பல காலமாக தொடர்கதையாகி வரும் இந்த சுரங்கபாதையில் ஒழுகும் தண்ணீர் குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் நகராட்சி அதிகாரிகள் இருப்பதாக குமுறுகின்றனர் இப்பகுதி மக்கள்....
இப்படி ஒழுகும் தண்ணீர் குடிநீரா அல்லது கழிவுநீரா என யோசித்த படி சீ சீ என கடந்து செல்லும் காலம் மாறி எந்த நீராக இருந்தால் என்ன என கையை உதறிவிட்டு தலையை குனிந்தபடி பாதையை கடக்க பழகி கொண்டுள்ளனர் வாகன ஓட்டிகள்...
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனின் தொகுதிக்குள் தான் வருகிறது இந்த சுரங்கப்பாதை... அப்படி இருந்தும் இதற்கு தீர்வு காணப்படாமல் இருப்பதாக குறைபட்டுக் கொள்கின்றனர் தொகுதிவாசிகள். அமைச்சரின் கவனத்திற்கு இது செல்லுமா?..
மணிகண்டன் செய்தியாளர்