மாவட்டம்

குடமுழுக்கு விழாவிற்கு வருகை தர இருக்கும் இஸ்லாமியர்கள்...

ஆலங்குடி பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை | ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் 700 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த புகழ்பெற்ற திருக்கோவிலாக திகழ்கிறது. சுந்தர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட  திருக்கோவிலின் பிதுப்பிக்கும் பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த சூழலில், எதிர்வரும் 27ம் தேதி இக்கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது குருஸ்தலமாக இந்த பேரூராண்டார் திருக்கோவில் பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் குடமுழுக்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆலங்குடி நகரில் வசிக்கும் இஸ்லாமிய மக்களை குடமுழுக்கிற்கு வரவேற்கும் விதத்தில், பாரம்பரிய முறைப்படி மசூதிக்கு சென்று அங்கிருந்த ஜமாத்தார்களிடம் கோவில் குடமுழுக்கிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

மத வேற்றுமைகளை தாண்டி மத நல்லிணக்கத்தோடு, கோவில் நிர்வாகத்தினர் இஸ்லாமிய மக்களை பாரம்பரிய முறைப்படி கோவில் குடமுழுக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள நிகழ்ச்சி ஆலங்குடி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.