திருப்பதி - மதனப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் லாரியில் கடத்தி செல்லப்பட்ட செம்மரங்களுடன் தமிழகத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி - மதனப்பள்ளி சாலையில் லாரியில் கடத்தி செல்ல இருந்த சுமார் ₹.41 லட்சம் மதிப்புள்ள 42 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்து தமிழகத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி மாவட்டம், பாக்கராபேட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மதனப்பள்ளி - திருப்பதி (என்.எச்.-71) தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதை சாலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருந்தது. வாகன சோதனைக்காக நிற்கும் போலீசாரை கண்டதும் தொலைவில் லாரியை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றனர்.
அதற்குள் லாரியை சுற்றி வளைத்த போலீசார் 4 செம்மர கடத்தல்காரர்களை கைது செய்து ₹.41.53 லட்சம் மதிப்புள்ள 1051 கிலோ எடையுள்ள 42 செம்மரக் கட்டைகள் மற்றும் லாரி பறிமுதல் செய்தனர். இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜே. ராஜ் குமார் (29), திருவண்ணாமலை மாவட்டத்தை ஆர்.பாரத் (35), சி.கோகுல மாறன் (30), ஏ.சரவணன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரில் ராஜ்குமார் மீது 4 வழக்குகளும், பாரத் மீது 2 செம்மரக் கடத்தல் வழக்குகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது.
இந்தக் கும்பலின் மூளையாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த சேகர் என்பவர், மற்றொரு குற்றவாளியான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் மூலம் இவர்கள் செம்மர கடத்தலுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டி அங்கிருந்து தமிழகத்துக்கு கடத்தி செல்வது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.