பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கனல் கண்ணன் தான் அணிந்து சென்ற சட்டை கசங்காமல் வெளியே வந்துள்ளதாக கூறினார்.
சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் அவரது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடை அணிந்து வெளிநாட்டை சேர்ந்த ஒரு நடிகர் இளம்பெண்ணுடன் நடனமாடும் காட்சிகள் இருந்தன. அந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ காட்சி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி திட்டுவிளையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் (வயது54) நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக கனல் கண்ணன் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மதிய உணவு சாப்பிடக்கூட வெளியே விடாமல் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு மாலை 6 மணி அளவில் திடீரென கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவரை பாளையங்கோட்டை மத்திய சிறை சாலையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து கனல் கண்ணன் ஜாமினில் வெளியே வந்தார். அவரை நெல்லை, குமரி மாவட்ட இந்து முன்னணியினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
வெளியே வந்த கனல் கண்ணன் கூறும் போது, தான் அணிந்து சென்ற சட்டை கசங்காமல் வெளியே வந்துள்ளதாக கூறினார்.