விழுப்புரம் : மரக்காணம் கோட்டக்குப்பத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்நிலையத்தில் பல்வேறு வழக்கில் பிடிபட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு வெளிவந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர்.
ஏலம் எடுக்க வந்தவர்கள் சிலர் வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பார்த்து அதன் மதிப்பை துல்லியமாக எடைபோட்டுக் கொண்டு வந்தனர். அப்போது நான்கு சக்கர வாகனத்தின் கதவைத் திறந்து பார்த்தபோது அதனுள் மண்டை ஓடு ஒன்று சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
மேலும் படிக்க | போலி மதுபானம் விற்பனை...! 5 பேர் கைது...!
காவல்நிலையக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இடத்தில் எப்படி மண்டைஓடு வந்தது? என ஏலதாரர்கள் போலீசாரிடம் முறையிட்டதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பல மாதங்களாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மழை, வெயிலில் கிடந்து பழுதாகியிருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் மண்டை ஓடு கிடந்தால் இதை எப்படி வாங்கிச் செல்வது? என சந்தேகத்துடன் ஏலதாரர்கள் கேள்வி எழுப்பியதையடுத்து அந்த இடமே பரபரப்பானது.
மேலும் படிக்க | உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய இளைஞர்...!
இறுதியில் போலீசார், ஏலதார்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். கோட்டக்குப்பத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவுள்ள கூனிமேடு குப்பம் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் கைப்பற்றப்பட்டது. அடையாளம் தெரியாத இந்த நபரின் மண்டைஓடுதான் இது என காவல்துறையினர் சார்பில் தெரிவித்ததையடுத்து பரபரப்பு குறைந்து ஏலம் தொடர்பான வேலைகள் தொடர்ந்தது.
பழைய வாகனங்களை ஏலம் எடுக்க வந்த போது மண்டைஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஏலதாரர்களை மட்டுமல்ல விழுப்புரத்தையே வெடவெடக்க செய்துள்ளது.