க்ரைம்

கொடநாடு வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு செப்21 வரை அவகாசம்!

Tamil Selvi Selvakumar

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல்விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு செப்டம்பர் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தாங்கள் குறிப்பிடும் அனைவரையும் விசாரிக்கக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் மேல்விசாரணை நிலை குறித்து காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் மேல்விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்டு தீபு உள்பட மூன்று பேரின் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்துள்ளார்.