கோயிலில் நுழைய முயன்ற பட்டியலின மக்கள் தடுத்து நிறுத்தம்!

கோயிலில் நுழைய முயன்ற பட்டியலின மக்கள் தடுத்து நிறுத்தம்!
Published on
Updated on
2 min read

ராசிபுரம் அருகே  பெரியமாரியம்மன் கோவிலிற்குள் வழிபட சென்ற பட்டியலின மக்கள். தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கோவில் முன்பு தர்ணா போராட்டம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் அருள்மிகு ஶ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட சென்ற முயன்றதாகவும் அப்போது மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தி கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காததால் இருதரப்பினர்களுக்கும் இடையே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோவிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி காவல்துறையினர் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறு உத்தரவு வரும் வரை கோவிலுக்கு செல்லும் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் பிரார்த்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் எந்த ஒரு தரப்பினரும் திருவிழா நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு இவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய தாம்பூலத் தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு உடன் முயன்று உள்ளனர். கோயிலில், நுழைய முயன்ற பட்டியலின மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com