சென்னை, பாரிமுனை பகுதியில் நேற்று நள்ளிரவு பரிசு பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 24 மணிநேரத்தை கடந்தும் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, பாரிமுனை பகுதியில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் கீம் சிங் என்பவருக்கு சொந்தமான பரிசு பொருட்கள் கடையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ அதிகளவில் கொழுந்துவிட்டு எரிந்ததால் வண்ணாரப்பேட்டை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டன.
சுமார் 8 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் கடைமுழுவதும் பரிசு பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்ததால் புகையானது தொடர்ந்து அதிக அளவில் வெளியேறி வந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் நேற்று முழுவதும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருப்பதால் தொடர்ந்து புகைந்து வருவதோடு அடிக்கடி சிறிய அளவில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 24 மணி நேரத்தை கடந்தும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த தீயை அணைக்கும் பணியில் 15 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 15 மெட்ரோ வாட்டர் வண்டிகள் என இதுவரை 30க்கும் மேற்பட்ட வண்டிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: எடப்பாடியிடமிருந்து அதிமுகவை மீட்டுத் தாருங்கள்... ஓபிஎஸ் தலைமையில் ஒன்று படுத்துங்கள்!!!