ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை படுதோல்வி அடையச் செய்த எடப்பாடி பழனிசாமி யிடமிருந்து கழகத்தை மீட்க வேண்டும் என்று வத்திராயிருப்பில் மாவட்ட மகளிர் அணியின் சார்பில் ஒப்பாரிப் போராட்டம் நடைபெற்றது.
ஒப்பாரி போராட்டம்:
எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து அதிமுகவை மீட்கக் கோரி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அதிமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வி அடைந்ததை அடுத்து, வத்திராயிருப்பு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமை வகித்தார்.
பங்கேற்றோர்:
மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி லதாரங்கராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி பாப்பாத்தி பாலகிருஷ்ணன், மாவட்ட கழக துணை செயலாளர் திருமதி சுப்புலட்சுமி தர்மர் ஆகியோர் முன்னிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் குண்டுமணி என்ற முத்தையா, வத்திராயிருப்பு நகர செயலாளர் கௌதமி பழனி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராமச்சந்திர பிரபு ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் தலைமையில்:
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் எடப்பாடியிடமிருந்து அதிமுகவை மீட்டுத் தாருங்கள் என்றும் கட்சியை ஓபிஎஸ் தலைமையில் ஒன்று படுத்துங்கள் எனக் கூறி புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா படத்திற்கு முன்பு ஒப்பாரி வைத்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க: மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக...!!!