க்ரைம்

இப்படி ஏமாத்தீட்டியே.. நல்லா இருப்பியா? நமீதா முன்பு பொங்கிய பெண்..

திருச்சி மணப்பாறையில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண் ஒருவர், நடிகை நமிதாவை குற்றம் சாட்டியிருக்கிறார்.

Malaimurasu Seithigal TV

திருச்சி : புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலைப் பகுதியில் தனியார் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக தொகுத்து அதை வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் படுவிமரிசையாக நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சிக்கு கவர்ச்சி நடிகை நமீதா, சின்னத்திரை நடிகை நீலிமா ராணி உள்பட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது.

அறக்கட்டளையின் பெருமைகளைப் பார்ப்பதற்கு விருப்பமில்லாவிட்டாலும், கவர்ச்சி நடிகை நமீதாவைக் காண்பதற்காகவே அந்த பகுதி களைகட்டத் தொடங்கியது. தப்பாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க, இரண்டு குதிரைகளின் ஆட்டம் அனைவரின் கண்ணைக் கவர்ந்தது. 

2 வெள்ளைக் குதிரைகளுக்கு நடுவே ஒய்யாரமாய் நடந்து வந்த நமீதாவைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் பொங்க வரவேற்று மேடையேற்றினர். தங்கள் தலைவி நமீதாவின் வாயில் இருந்து மச்சான்ஸ்.. என்ற வார்த்தை எப்போது வரும் என காத்திருந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்து புகுந்து நுழைந்தார் பர்தா போட்ட ஒரு பெண்.

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த ஹாஜிரா என்ற அந்த பெண் மேடையில் ஏறி விருந்தினர்களுக்கு மத்தியில் நாற்காலியிட்டு அமர்ந்து கொண்டார். எதற்காக இங்கு வந்தீர்கள் என்று அறக்கட்டளை நிர்வாகி கேட்டதற்கு ஒரு உண்மையைக் கூறி வந்தவர்களை எல்லாம் திடுக்கிட வைத்தார். 

ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி கொடுப்பதாய் கூறும் இந்த நிறுவனம் என்னை ஏமாற்றி விட்டது. இவர்களை நம்பி 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து போனேன் எனக் கூறி அதிர வைத்தார். ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கணக்கானோரிடம் நிதி வசூலித்து பலகோடி ரூபாய் வரை ஏமாற்றியதாகவும், இதன் பேரில் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். 

தொகையை திருப்பிக் கேட்ட பங்குதாரர்களிடம், அதை நன்கொடையாக வழங்கியது, அதனால் திருப்பித் தர முடியாது எனவும் கூறியிருக்கிறார் ரவிச்சந்திரன். இப்படி மக்களை ஏமாற்றியவர் ஏதோ சாதித்தது போல வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடுவது தேவையா? என்றும், தான் கொடுத்த 16 லட்சம் ரூபாயை இப்போதே தந்து விட்டு விழாவை நடத்துமாறும் அந்த பெண் கோஷமிட்டார். 

பின்னர் மேடையில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்த அந்த பெண்ணை மிரட்டி வெளியேற்றி விட்டு, நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரனை பத்திரமாக கார் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை எல்லாம் வேடிக்கை பார்த்த நமீதா, நீலிமாராணி உள்பட நடிகைகள் தவறான இடத்துக்கு வந்து விட்டோமோ என புலம்பியவாறே வெளியேறியிருக்கின்றனர். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயரதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு, அறக்கட்டளை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தொடங்கியுள்ளனர்.  அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், நமீதாவைப் பார்த்து மனது நிறைய செல்ல இருந்தவர்கள், கடைசியில் வயிற்றை மட்டும் நிறைத்துச் சென்றனர்.