கவர் ஸ்டோரி

‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...?

Malaimurasu Seithigal TV

கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவை எதிர்த்து வரும் தமிழ்நாடு, கேரளா அரசுகள் அத்தகைய நடவடிக்கையை எடுக்குமா?

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘தி கேரளா ஸ்டோரி’.  தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சொல்லுமளவிற்கு பிரபலமோ, ரசிகர் வட்டாரமோ இல்லாத இந்த இயக்குநர் இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்துள்ளார். இதிலே அவர் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'தி கேரள ஸ்டோரி' படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த டீசர் வெளியான நாள் முதலே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன. இதற்கு அப்போதே சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த படம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரின்படி 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகின்றனர். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்றம் செய்கின்றனர்.

பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது.

இதற்கு கேரளா சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் பினராயி விஜயன் வரை பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் முஸ்லீம் அமைப்புகள் இந்த படத்துக்கு தடை கோரி போராட்டங்களும் நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த படத்துக்கு தடை விதிக்கமுடியாது என்று தெரிவித்துவிட்டது.

கேரளாவில் நிலை இப்படி இருக்க இந்தியாவெங்கும் இந்த படம் மதநல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதாக பல்வேறு மாநிலங்களில் பலரும் போராடினர். கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் கடந்த 5-ம் தேதி இந்த படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டிலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது. எதிர் கட்சிகள் இதனை எதிரத்தாலும் பாஜக தனது முழுமையான ஆதரவை இப்படத்திற்கு அளித்தது. பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேச அரசு கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.

தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு இஸ்லாமிய சமூக தரப்பில் இருந்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து திரையரங்குகள் முன் போராட்டங்களும் நடத்தினர். அவர்களோடு நாம் தமிழர் கட்சியும் இணைந்து கொண்டது. இத்திரைப்படத்திற்கு எதிராக அறிக்கை விட்டதோடு மட்டுமின்றி அமைந்தகரையில்  இத்திரைப்படம் வெளியான வணிக வளாகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தியிருந்தார். இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தினை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த டிஜிபி உத்தரவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவியதால் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் ரத்து செய்யப்படுவதாக மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து இத்திரைப்பட தயாரிப்பாளர் விபுல்ஷா, நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழ்நாடு அரசை மிரட்டி படத்தை வெளியிட விடாமல் தடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும் திரைப்படத்தை வெளியிட அரசு அனுமதிக்க வேண்டுமெனவும் நீதிமன்ற உத்தரவுப்படி திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு மேற்கு வங்காளத்தில் ஆளும் திரணாமுல் காங்கிரஸ் அரசு அதிகாரப் பூர்வமாக தடைவிதித்துள்ளது. எந்த ஒரு வெறுப்பு, வன்முறை சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மாநிலத்தின் அமைதியைக் காக்கவும் இந்தப் படத்துக்கு தடைவிதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்க எடுக்கப்படும் என்றும்  எச்சரித்துள்ளார். இத்திரைப்படத்தின் கதைக்களமான கேரளாவோ கடும் எதிர்ப்புகள் எழுந்த தமிழ்நாடு அரசோ அதிகாரப் பூர்வமாக தடைவிதிக்காத நிலையில் மேற்கு வங்க மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்ப்பதில் கூட்டணி கட்சிகள் அனைத்து ஒரே நேர்கோட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், மாநிலத்திற்கு மாநிலம் சில முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன. இம்முன்னெடுப்புகளால் 2024 காங்கிரஸ் கூட்டணி உறுதியாகுமா என்ற கருத்துகூட நிலவுகிறது .உதாரணமாக தமிழ்நாடு அரசும் பஞ்சாப் அரசும் சுங்கச்சாவடிகளை எதிர்க்கின்றன. ஆம் ஆத்மி ஒரு படி மேலே போய் சுங்கச்சாவடிகளை அதிரடியாக மூடுகிறது. தமிழ்நாட்டில்  சுங்கச் சாவடிகள் கட்டண விவகாரத்தில் அரசு எந்த முடிவும் அறிவிக்கவில்லை. கேரளா ஸ்டோரி விஷயத்தில் கூட சொல்லுமளவிற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லாத மேற்கு வங்க மாநில அரசு முதல் ஆளாக முன்வந்து தடை விதித்துள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசின் விழாக்களில் கூட கலந்து கொள்ளாமல் தனது எதிர்ப்பை உறுதியாக வெளிக்காட்டி வருகிறார். பீகாரில் ஆட்சி நடத்தும் நிதிஷ் குமார் அரசு ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் செய்ததாக பாஜக தலைவர்களை கைது செய்வது என எதிர்வினையாற்றும் சூழலில்  தமிழ்நாட்டில் திமுக பெரிதாக இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்காதது கூட்டணி கட்சியினர் மற்றும் மத சிறுபான்மையினர் மத்தியில் சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகள் எதுவும் பாஜகவின் சித்தாந்தத்திற்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்டவை அல்ல. ஆனால் பாஜகவின்  சித்தாந்தத்திற்கு நேர் எதிரான சித்தாந்தமா திராவிட சித்தாந்தத்தை கொண்ட திமுகவை விட எதிர்ப்பு நடவடிக்கைகளில் இக்கட்சிகள் அதிக தீவிரத்தை காட்டியுள்ளன. ஆனால்  தமிழ்நாடு அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளித்த போது கூட சில சலசலப்புகள் ஏற்பட்டன.  ஒருவேளை மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் திரைப்படத்தை திரையிடாமல் விட்டதற்கு திமுக அரசு மறைமுக அழுத்தம் கொடுத்திருக்கலாம் ஆனால் ஒரு சமூக நீதி அரசு என்ற வகையில் இதற்கு தடை விதித்திருந்தால் மட்டுமே சிறுபான்மையினரின் உறுதியான நம்பிக்கையை பெற இயலும். தற்போது சிறுபான்மையினர் ஆதரவு நம்பிக்கையை தற்போது மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி பெற்றுள்ளார் என்றே கூறலாம்.