காவிரி, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் புதிதாக 25 இடங்களில் புதியதாக மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதியளித்துள்ளது. மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படும் நிலையில், அதனைத் தடுக்கத் முடியாத திமுக அரசு, புதிய குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது தமிழ்நாட்டில் மணற்கொள்ளையை மேலும் பலமடங்கு அதிகரிக்கவே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் நடைபெற்றுள்ள மணற்கொள்ளையால் ஆறுகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வேளாண்மை செய்ய முடியாத மிகமோசமான சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அனுமதியளித்துள்ள குவாரிகளில், அனுமதித்த அளவை விட நாள்தோறும் பல்லாயிரம் டன்கள் மணல் கொள்ளையடிக்கப்பட்டே வருகிறது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆறு மீட்டர் ஆழத்திற்குச் சுரங்கம் போல ஆறுகள் சூறையாடப்படுகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, இதனை தடுத்து முறைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, புதிய குவாரிகள் திறக்க முடிவு செய்திருப்பது விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் கொடுஞ்செயலாகும். அதுமட்டுமின்றி, வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படவும், பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கவும் வழிவகுக்கும் என அறிவுறுத்தியுள்ள அவர் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.