பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது இனி புகாரளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
நகரங்களாக இருக்கட்டும், கிராமங்களாக இருக்கட்டும் அனைத்து இடங்களிலும் பள்ளி , கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் ஃபுட்போர்ட் அடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ”இளங்கன்று பயம் அறியாது” என்ற பழமொழிக்கேற்ப பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏற்படும் விபத்துக்களை அறிந்தும், எந்தவித பயமும் இல்லாமல் ஆபத்தான பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்துகளில் ஏறிக்கொண்டு படிக்கட்டில் தொங்கிக்கொண்டும், படிக்கட்டில் நின்றுக்கொண்டு காலால் தரையை தேய்த்துக்கொண்டும், பேருந்து எடுத்தவுடன் சினிமா பாணியில் ஹீரோபோல் ஓடிவந்து ஏறி தொங்கிக்கொண்டும் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள், சில நேரத்தில் கீழ் விழுந்து கொடூரமாக உயிரிழந்து வருகின்றனர்.
இதையும் படிக்க : பயனாளிகளிடம் அரசின் திட்டம் சென்றடைவதை உறுதி செய்ய ஆலோசனை...அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர்!
இப்படியெல்லாம் விபத்துகள் ஏற்படும் என்பதை தெரிந்தும் கூட, விளையாட்டாக செயல்படும் பள்ளி கல்லூரி மாணவர்களால், அவ்வப்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதையெல்லாம் தட்டிக்கேட்கும், ஓட்டுநர் நடத்துனரையும் கூட அவர்கள் மதிப்பதில்லை. தட்டிக்கேட்டால் அவர்களையும் தரைக்குறைவாக பேசுவது, பயணிகள் கேட்டால் அவர்களையும் தரைகுறைவாக பேசுவது போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் பிரச்னையில் சிக்குவது யாரென்றால் பாவம் பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் தான்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களின் அறிவுரையை கேட்காமல் கட்டுப்பாட்டை மீறி நடந்தால், காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100 அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கோ தகவல் தெரிவித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஏனென்றால், பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என்பதால் இனி அவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு பிறகாவது, மாணவர்கள் ஃபுட்போர்ட் அடிப்பதை தவிர்ப்பார்களா அல்லது மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பதை போல அதையே செய்ய போகீறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...