அதிமுக அலுவலக சாவி யாருக்கு என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
அதிமுகவின் உட்கட்சி பூசல்:
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைமை யாருக்கு என்ற போட்டி ஓபிஎஸ்க்கும், ஈபிஎஸ்க்கும் இடையில் நிலவி வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் நிலவி வரும் சட்ட போராட்டமானது உச்சகட்டத்தை தொட்டு வருகிறது.
ஜுலை 11:
கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், ஓபிஎஸ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
கலவரம்:
அப்போது, அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 காவலர்கள் உள்பட 47 பேர் காயம் அடைந்தனர்.
சீல் வைப்பு:
கலவரத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட வருவாய்த்துறையினர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமாக நடந்துக்கொண்டதாகக் கூறி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
சீலை அகற்றக்கோரி வழக்கு; உத்தரவிட்ட நீதிபதி:
அதிமுக அலுவலகத்திற்கு வைத்த சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றிவிட்டு சாவியை ஈபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். மேலும், ஈபிஎஸ் தவிர தொண்டர்கள் யாரும் ஒரு மாத காலத்திற்கு அதிமுக அலுவலகத்திற்குள் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஓபிஎஸ் மேல்முறையீடு:
அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஈபிஎஸ் தரப்பினரும், வருவாய் துறையினரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
ஈபிஎஸ் பதில் மனு:
இந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓ.பி.எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உரிமை இல்லாதபோது அ.தி.மு.க அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது. அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமையகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்க கோருவதில் எந்த முகாந்தரமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ் அதிமுக பண விவகாரங்களில் கையாடல்கள் நடத்தியுள்ளார். இவ்வாறு கையாடல் நடத்திய ஒருவரிடம் எவ்வாறு நீதிமன்றம் அலுவலக சாவியை ஒப்படைக்க முடியும். எனவே, அதிமுக தலைமை சாவியை கோரும் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஈபிஎஸ் தனது பதில் மனுவில் கோரியிருந்தார்.
வருவாய்துறையினரின் பதில்மனு:
அதேபோல், இந்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுபடுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் எந்தவித வன்முறையும் வெடிக்காமல் இருக்க 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதேபோன்று, அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கும் விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின்படியே அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை மாறாக நீதுமன்ற உத்தரவையே செயல்படுத்துயுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை முதல் ஞானவாபி சர்ச்சை வரை..!!!
இன்று விசாரணை:
ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் வந்த இரண்டு பதில் மனுக்களையும் பெற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்கியது. அதில் அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம், அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சந்தேகம்:
இந்நாள் வரையிலும் அதிமுக தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் மாறி மாறி வந்துகொண்டிருப்பதால், அதிமுக அலுவலக சாவி கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று யாருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் என அதிமுக தொண்டர்களிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலும் ஈபிஎஸ் வெற்றி பெற்றதால், ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும். அதிமுகவில் ஓபிஎஸ்சின் நிலை என்ன? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடம் நிலவி வருகிறது.