ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை முதல் ஞானவாபி சர்ச்சை வரை..!!!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை முதல் ஞானவாபி சர்ச்சை வரை..!!!

ஞானவாபி வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. முஸ்லிம் தரப்பின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், ஞானவாபி விவகாரம் விசாரணைக்கு உரியது என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் வழிபாட்டு தலச் சட்டம் 1991 பொருந்தாது  இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தவிர, நாட்டில் இரண்டு பெரிய பிரச்னைகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. முதலாவது மதுராவின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி தகராறு மற்றும் இரண்டாவது டெல்லியின் குதுப்மினார் தகராறு. ஞானவாபி உள்ளிட்ட மூன்று வழக்குகளின் விசாரணை வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இந்த மூன்று வழக்குகளிலும் இதுவரை என்ன நடந்தது, தீர்ப்பு எப்போது எதிர்பார்க்கப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்வோம்.

மதுராவின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை:

ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி மற்றும் மதுராவின் ஷாஹி இத்கா மசூதி தொடர்பான வழக்கு உள்ளது. 13.37 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், முழு நிலத்தையும் கையகப்படுத்தி, ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி ஓரத்தில் கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சர்ச்சைக்குரிய இடத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பான வழக்கு கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையிலேயே இருந்தது. தொடர் காலதாமதம் காரணமாக, மனுதாரர் மணீஷ் யாதவ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். முன்பு வைத்திருந்த அதே கோரிக்கையையே உயர்நீதிமன்றத்திலும் முன்வைத்தார் மணீஷ் .

இதைத் தொடர்ந்து, கீழ் நீதிமன்றத்தில் அறிக்கையை பெற்றது உயர்நீதிமன்றம். இந்த வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கீழ் நீதிமன்றத்தில் கோயில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இப்போது இந்த விஷயத்தில் உள்ள சர்ச்சையையும் புரிந்துகொள்வோம். 1669-70ல் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தில் உள்ள பழமையான கேசவ்நாத் கோவிலை அழித்து, அதே இடத்தில் ஷாஹி இத்கா மசூதியை ஔரங்கசீப் கட்டினார் என்று கூறப்படுகிறது. 1770ல் முகலாயர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே கோவர்தனில் போர் நடந்தது எனவும் அதில் மராட்டியம் வெற்றி பெற்றது எனவும் கூறப்படுகிறது. வெற்றிக்குப் பிறகு, மராட்டியர்கள் மீண்டும் கோயிலைக் கட்டினார்கள் எனவும் கூறியுள்ளனர்.

1935 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் பனாரஸின் ராஜா கிருஷ்ண தாஸுக்கு 13.37 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது எனவும் இந்த நிலம் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளையால் 1951 இல் கையகப்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

1968 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி, ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 13.37 ஏக்கர் நிலத்தில் கோவில் மற்றும் மசூதி இரண்டையும் தொடர்வது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலத்தில், 10.9 ஏக்கர் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தானுக்கு எனவும் 2.5 ஏக்கர் ஷாஹி இத்கா மசூதிக்கு எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், முஸ்லிம் தரப்பு தனது உடைமையில் சிலவற்றை கோவிலுக்காக விட்டுக் கொடுத்ததால், அதற்கு ஈடாக முஸ்லிம் தரப்புக்கு அருகில் சிறிது இடம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கோயில் தரப்பில் 13.37 ஏக்கர் நிலம் முழுவதையும் சொந்தமாக்கக் கோருகிறது. 

குதுப்மினார் வழக்கு:

டெல்லி குதுப்மினார் தொடர்பான சர்ச்சைகள் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன.  27 இந்து தெய்வங்கள் மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து குதுப்மினார் கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, அதில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் இது விஷ்ணு தூண் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கோவிலை சீரமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்படுள்ளது. டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. 

 இந்நிலையில், முதலில் ஜூன் 9ஆம் தேதியும், பின்னர் ஆகஸ்ட் 24ஆம் தேதியும் வழக்கு மீதான முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் அதன் உரிமை தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உரிமை விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படாத வரை, வழிபாட்டை அனுமதிக்கும் மனு மீதான தீர்ப்பை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உரிமை மனு மீதான விசாரணை நாளை அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஞானவாபி வழக்கு:

ஞானவாபியில் அமைந்துள்ள சிருங்கர் கௌரியின் வழக்கமான தரிசனம் மற்றும் தெய்வங்களின் பாதுகாப்பிற்காக ஐந்து பெண்கள் 18 ஆகஸ்ட் 2021 அன்று, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஞானவாபி வளாகத்தில் 16 மே 2022 அன்று ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2022 மே 23 முதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில், சுதந்திரத்தின் போது வழிபாட்டு தலச் சட்டம் ஞானவாபி சிருங்கர் கவுரி வழக்கில் பொருந்துமா என்பது குறித்து நீதிமன்றம் விசாரித்து வந்தது. இப்போது நீதிமன்றம் இந்து தரப்பில் தீர்ப்பு வழங்கியுள்ளது. முஸ்லிம் தரப்பின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உரியது என்று கூறியது. இதில் ஞானவாபி வளாகம் இந்து தரப்புடையதா அல்லது முஸ்லீம் தரப்புடையதா என்பது விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க: ”பிரதமர் நரேந்திர மோடியினால் மட்டுமே எல்லாம் சாத்தியம். மோடியின் அரசு சமூகத்தின் கடைசி நபர் வரை சென்றடைகிறது”கட்டானா