கவர் ஸ்டோரி

அதிமுக வேட்பாளராக இவரே தொடர்வார்...தமிழ்மகன் உசேன் வெளியிட்ட படிவம்...அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு!

Tamil Selvi Selvakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டுள்ளார். 

ஈ.பி.எஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் :

பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈ.பி.எஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இன்று விநியோகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை இரவுக்குள் படிவத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக தென்னரசு தொடர்வார் என்றும், பிரமாண பத்திரத்தில் அவருக்கு ஆதரவாக ஒப்புதல் அளிக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் மாநகர மாவட்டத்தை சேர்ந்த  பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அடையாள அட்டை, ஆதார் கார்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட நகலை ஒப்படைத்தனர்.

மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.