கவர் ஸ்டோரி

கோட் சூட்டில் லண்டன் பறந்த அமைச்சர்...வேற லெவலில் ட்ரெண்டாகும் போட்டோஸ்...!ஏன் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றிருக்கும் நிலையில், அவருடைய கோட் சூட் புகைப்படங்களை திமுகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அணை:

கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் உயிர்நாடியாக இருந்து வருகிறது. ஏனென்றால், இந்த அணையின் மூலம் தான் தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நேரடியாகவும், ஒருசில மாவட்டங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?:

தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இன்னல்களுக்கு இடையில் கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுயிக். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர், தனது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த அணையை கட்டியவர். இதனால் தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக்கை தெய்வம் போலவே வணங்கி வருகின்றனர். அதேபோன்று, அவரின் பிறந்த நாளை தேனி மாவட்ட மக்கள் ஆண்டு தோறும் ஒரு திருவிழா போலவே கொண்டாடி வருகின்றனர்.

சிலை நிறுவுவதாக கூறிய தமிழக அரசு:

பல்வேறு இடையூறல்களுக்கு மத்தியில் அணையை சிறப்பாக கட்டிய கர்னல் ஜான் பென்னிகியிக்குக்கு அவருடைய சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை நிறுவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செப்டம்பர் 10 சிலை திறப்பு விழா:

தமிழக அரசு அறிவித்த படியே, முதலில் சிலை நிறுவுவதற்காக இங்கிலாந்தின் சட்டப்படி செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் அனுமதியைப் பெற்றது. அதன்பின், அதற்கான வேலைகளை தொடர்ந்த தமிழக அரசு கட்டுமான பணிகளை பூர்த்தி செய்தது. இதனையடுத்து வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலை திறப்பு விழா லண்டனில் நடைபெறவுள்ளது. 

லண்டன் பறந்த அமைச்சர்:

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் லண்டன் வாழ் தமிழர்களால் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றுள்ளார். நேற்று இரவு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட அவரை திமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

வைரலாகும் கோட் சூட்:

இந்நிலையில் லண்டனிற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஏனென்றால், கிட்டதட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தீவிர அரசியலில் பயணித்து வரும் ஐ.பெரியசாமி எப்போதுமே வெள்ளை வேட்டி சட்டையில் மட்டும் தான் காட்சி தருவார். ஆனால், தற்போது லண்டன் பறந்திருக்கும் இவர் நீல கலரில் கோட் சூட் அணிந்து சென்றுள்ளார். வழக்கறிஞரான இவர் நீண்ட காலத்திற்கு பிறகு கோட் சூட் அணிந்திருப்பதால் அவருடைய புகைப்படங்களை திமுகவினர் இணையத்தில் பரப்பி வருகின்றனர். அத்துடன், வேட்டி சட்டையில் மட்டுமல்ல கோட் சூட்டிலும் அமைச்சர் மாஸாக இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர் திமுகவினர்.