ஹத்ரஸ் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியின பெண்:

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ரசில், பழங்குடிப் பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு அந்த 4 பேரும் அப்பெண்ணின் நாக்கை அறுத்து, படுகொலை செய்தனர்.

இரவோடு இரவாக தகனம்:

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பெண்ணின் உடலை மீட்டு, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துவிட்டார். இதனால் இரவோடு இரவாக பெண்ணின் உடலை காவல் துறையினர் தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பத்திரிக்கையாளர் கைது:

இந்நிலையில், இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்து உத்தரப்பிரதேச அரசு கூறும்போது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் இணைந்து சித்திக் கப்பான் சதித் திட்டம் ஒன்றை அரங்கேற்ற வந்தார். ஆகையால் அவர் கைது செய்யப்பட்டு, தேசதுரோக சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியது. இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அலகாபாத் நீதிமன்றம்:

இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், சித்திக்கின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்:

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சித்திக் காப்பான் மனுத்தாக்கல் செய்தார். தற்போது, இம்மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி விசாரணையை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நடத்திய நீதிபதிகள், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சித்தின் கப்பானிடம் எந்தவித வெடிப்பொருள்களும் கண்டுபிடிக்கபடவில்லை என்பதால், கப்பானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், கப்பன் ஆறு வாரங்கள் டெல்லியில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி உத்தரவிட்டது. ஆறு வாரங்களுக்குப் பிறகு, அவர் கேரளாவில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லலாம் எனவும், அப்போது அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் கேள்வி:

இந்த வழக்கின் விசாரணையின் போது, ”சித்திக் கப்பன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உ.பி காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை. ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதற்காக பொதுக் குரல் எழுப்ப முயன்றது சட்டத்தின் பார்வையில் குற்றமா?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.