கவர் ஸ்டோரி

அரசியலில் ரீ-என்ட்ரி தருகிறாரா மு.க.அழகிரி? துரை தயாநிதியின் பங்கேற்பு உணர்த்துவதென்ன!!!

Malaimurasu Seithigal TV

அழகிரியின் குடும்பம் மீண்டும் அரசியலில் பங்கேற்பதற்கான முன்னேற்பாடு தான் தயாநிதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான ஒரே நோக்கம்.

அரசியல் நீக்கம்:

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி, கலைஞர் இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதன் பிறகு, அவரது இளைய சகோதரர் மு.க. ஸ்டாலின் உடன் அவ்வப்போது சிறிய உரசல்கள் இருந்தாலும் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை.  கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்தே முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சரான மு.க.அழகிரி கட்சியில் அரசியலில் இருந்து விலகி அமைதியாகவே இருந்து வருகிறார். 

இணையாத அழகிரி:


சட்டமன்றத் தேர்தல் 2021ல்  திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகே, கருணாநிதி குடும்பத்தில் ஒரு சுமூக நிலை ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் இதுவரை மு.க. ஸ்டாலினும் அவரது மூத்த சகோதாரர் மு.க. அழகிரியும் சந்தித்துக்கொள்ளவும் இல்லை.  சந்திக்க விரும்பியதாகவும் தெரியவில்லை. மு.க. அழகிரி குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்துகொண்டாலும் வெளியே எந்த பொது நிகழ்ச்சிகளிம் இதுவரை கலந்துகொள்ளவில்லை.

திடீர் சந்திப்பு:

இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.அழகிரி.

பதிலளிக்கப்படாத கேள்விகள்:

அப்போது அவரிடம் நீங்கள் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா,  நீங்கள் மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா, உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.அழகிரி எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.   இருப்பினும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார். 

அரசியலில் ரீ-எண்ட்ரி:

அவர் எந்த பதிலும் அளிக்காத நிலையில் மு.க. அழகிரி மீண்டும் அரசியலுக்கு வருவதற்காகவே இதுபோல அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் என்ற விமர்சனம் அப்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

தமிழ்நாடு முதலமைச்சரும் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் மு. க. அழகிரியின் மகனும் உதயநிதியின் அண்ணனுமான துரை தயாநிதி அழகிரி கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அழகிரியின் குடும்பம் அரசியலில் பங்கேற்பதற்கான முன்னேற்பாடு தான் தயாநிதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான ஒரே நோக்கம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  முன்னாள் மத்திய அமைச்சரான மு. க. அழகிரி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்