தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021ல் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அவருடன் 34 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
ஓரங்கட்டப்பட்டாரா?:
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் ஐ. பெரியசாமியும் ஒருவர். அவருக்கு அதிக முக்கியத்துவமில்லாத கூட்டுறவு துறை வழங்கப்பட்டு அவர் ஓரங்கட்டப்படுவதாக அப்போது பெருமளவில் விமர்சனம் எழுந்தது. இதற்கு முக்கிய காரணம் புது முகங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய துறைகள்.
ஏற்பட்ட மனக்கசப்பு:
கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு இருந்ததால் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் அங்கும் பலர் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வழிவகுத்தனர். அவர்களில் செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பனும் சிலர். இதனால் அவர்கள் போன்ற புது முகங்களுக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டது என திமுக சார்பில் காரணம் கூறப்பட்டது. இதனால் தலைமை மீது ஐ. பெரியசாமி அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
மாற்றப்படாத அமைச்சரவை:
பொதுவாக 90களுக்கு பிறகான தமிழக ஆட்சியில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அவர்களில் அதிமுகவில் அமைச்சர்களும் அவர்களின் இலாகாக்களும் அடிக்கடி மாற்றியமைக்கப்படும் என்பது தமிழ்நாடு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் திமுகவை பொறுத்தவரை வெற்றி பெற்ற பிறகு யார் யார் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்ன துறை வழங்கப்படும் என்பதை கணிப்பது எளிதான ஒன்று. கடந்த 10ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும் கடைசியாக எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கத்தை தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
மாற்றப்படாத அமைச்சரவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மட்டும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெரிய அளவிலான மாற்றம் தற்போது அமைச்சரவையில் நடந்துள்ளது. திமுகவின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்த மனக்கசப்பு:
34 அமைச்சர்களுள் 11 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிருப்தியில் இருந்த ஐ. பெரியசாமியும் ஒருவராவார். அவருக்கு தற்போது கூட்டுறவு துறையிலிருந்து ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டுள்ளது. அவரை திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த இலாகா வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சருக்கும் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் இடையிலான மனக்கசப்பு நிச்சயம் விலகியிருக்கும் எனவும் திமுக கட்சி வட்டாரங்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
-நப்பசலையார்