கவர் ஸ்டோரி

”உலகம் ஒரு குடும்பம்” ஜி-20 இலச்சினை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி!! ஜி-20 இலச்சினைக்கான பிரதமரின் விளக்கம் என்ன? விரிவாக காணலாம்!!

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் தலைமைப் பாத்திரங்களை மேற்கொள்ளும் வகையில் இந்தியா உருவாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

ஜி-20 என்பது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.  

ஜி-20 நாடுகள்:

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் ஒன்றிணைப்பு ஆகும்.

ஜி-20 மாநாடு 2022:

ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலியில் நவம்பர் 15-16 தேதிகளில் நடைபெறவுள்ளது.  அதில் கலந்துகொள்ளும் உயர்மட்ட தலைவர்களில் மோடியும் ஒருவர்.

ஜி-20 தலைமை பொறுப்பு:

இந்தோனேசியா தற்போது ஜி-20 அமைப்பிற்கு தலைமை வகித்து கொண்டிருக்கிறது.  சக்திவாய்ந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்கும். 

இலச்சினை வெளியீடு:

இந்தியாவில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.  

விழாவில் மோடி உரை:

இந்தியாவின் ஜி20 மாநாட்டை நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசியுள்ளார் பிரதமர் மோடி.  

மேலும் ”உலகம் ஒரு குடும்பம்” என்ற கொள்கை என்பது உலகத்தின் மீது இந்தியா காட்டும் கருணையின் அடையாளம் எனவும் தெரிவித்துள்ளார் மோடி.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “சுதந்திரத்திற்குப் பிறகு, வளர்ச்சியின் உச்சத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம், அதில் கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து கட்சி அரசாங்கங்களின் முயற்சிகளும் அடங்கும்.  அரசாங்கமும் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

ஜி-20 இலச்சினை:

இலச்சினையானது மக்கள் கருத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது எனவும் இலச்சினையை உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது எனவும் தெரிவித்தார் பிரதமர் மோடி.

மேலும், “G-20 இன் இந்த இலச்சினை ஒரு சின்னம் மட்டுமல்ல.  இது ஒரு செய்தி.  இது நம் நரம்புகளில் இருக்கும் ஒரு உணர்வு.  இது ஒரு தீர்மானம், இது எங்கள் சிந்தனையில் சேர்க்கப்பட்டுள்ளது” என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் பிரதமர் மோடி.

கருப்பொருள்:

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கான கருப்பொருளாக “ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம்” என்னும் மக்களை ஒன்றுபடுத்தும் வலிமையான கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலச்சினையில் தாமரை: 

இலச்சினையில் பயன்படுத்தப்பட்டுள்ள தாமரையானது உலகத்தை ஒன்றிணைப்பதில் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை சித்தரிக்கிறது என பிரதமர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

மேலும் இந்த தாமரையானது உலக நல்லிணக்கத்தை குறிப்பிடுவதாகவும் தாமரையின் 7 இதழ்களும் 7 கண்டங்களைக் குறிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்