கவர் ஸ்டோரி

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு...!

Tamil Selvi Selvakumar

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்:

குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால், பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது.

இதனிடையே, பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் தேதி அறிவிப்பு:

தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது. 

தேர்தல் தேதி அறிவிப்பு:

அதன்படி, குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார். அதில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதாவது, 89 தொகுதிகள் கொண்ட முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதியும், 93 தொகுதிகள் கொண்ட 2ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேதியின் விளக்கம்:

முதல் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை நவம்பர் 5ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி, நவம்பர் 14ம் தேதி மனுத்தாக்கல் முடிவடையும் எனவும், நவம்பர் 15ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும், நவம்பர் 17ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, இரண்டாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை நவம்பர் 10ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி, நவம்பர் 17ம் தேதி மனுத்தாக்கல் முடிவுபெறும் எனவும், நவம்பர் 18ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் எனவும், நவம்பர் 21ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் அறிவித்தார்.

வாக்குச்சாவடிகள் அமைப்பு:

மேலும், இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரத்து 274 வாக்குச்சாவடிகள் பெண்களால் நிர்வகிக்கப்பட உள்ளதாகவும் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் பல்வேறு வியூகங்களுடன் தயாராகி வருவதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தலாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.