கவர் ஸ்டோரி

முட்கள் நிறைந்த கிரீடத்தை ஏற்க தயங்கும் அசோக் கெலாட்!!!

Malaimurasu Seithigal TV

காங்கிரஸ் தலைவர் பதவிக்காக தொடங்கிய அரசியல் குழப்பம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தப் பதவிக்கான முக்கியப் போட்டியாளரான அசோக் கெலாட், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு அவர் கூறிய கருத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

காங்கிரஸின் தொடர் சரிவுகள்:

பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. உள்கட்சியில் ஏற்படும் பிரச்சனைகள், கட்சி தாவல்கள் என காங்கிரஸின் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டேயிருக்கிறது. ஆபரேஷன் தாமரையை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கர்நாடகாவிலும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.

அதே பாணியில் ராஜஸ்தான் அரசையும் கவிழ்க்க நினைத்தது, ஆனால் அசோக் கெலாட் தனது சாமர்த்தியத்தால் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து பாஜகவின் ஆபரேஷன் தாமரையைத் தோல்வியுற செய்தார். இதனால் ராகுல் காந்தி குடும்பத்தின் "நம்பிக்கை நாயகனாக"  அசோக் கெலாட் இருப்பதால் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு அவருக்கே அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்தன.

புதிய முதலமைச்சர் யார்?:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட் போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையின்படி ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியின்படி ஒருவேளை கெலாட் தலைவராக தேர்வாகும் பட்சத்தில், முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனால் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

பைலட்டிற்கு எதிர்ப்பு:

அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள், சச்சின் பைலட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும், அம்மாநில சபாநாயகர்  சி.பி. ஜோஷியை 90 க்கும் அதிகமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்தித்து அவர்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 

இதனையடுத்து, அசோக்கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை சந்திக்க மறுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அசோக்கெலாட்டே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அக்டோபர் 19ம் தேதி புதிய காங்கிரஸ் தலைவர் அறிவிக்கப்படும் வரை ராஜஸ்தானின் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யக்கூடாது என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

சோனியாவை சந்தித்த கெலாட்:

அசோக் கெலாட், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.  அதன்பிறகு பேசிய கெலாட் ”தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பேனா, இல்லையா என்பது தெரியவில்லை. கடந்த நாள்களில் நடந்த அனைத்திற்காகவும் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். கடந்த 50 ஆண்டுகளில், ராஜீவ் ஜிக்கு பிறகு சோனியா ஜி காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் விசுவாசமான தொண்டனாக பணியாற்றினேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “மாநில தலைவராக இருந்தாலும் சரி, மத்திய அமைச்சராக இருந்தாலும் சரி, எனக்கு எப்போதும் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சோனியாவின் ஆசியுடன் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வுகல் அனைவரையும் உலுக்கியது. நான் அதற்காக வருந்துகிறேன், அதை என்னால் மட்டுமே அறிய முடியும். நானும் சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்.” என்றும் கெலாட் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்:

”நான் முதலமைச்சராகவே நீடிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் தெரிவித்ததே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால், சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். தலைவர் பதவிக்கான கோரிக்கை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நான் என் முடிவை தீர்மானித்துள்ளேன். இந்த சூழலில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.” என அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை விட்டு விலக விரும்பாத அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதால், அவர் ராஜஸ்தான் முதலமைச்சராக தொடர்வார் என்பது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இந்த முடிவால் சச்சின் பைலட்டின் நம்பிக்கையை நொடியில் தகர்த்துவிட்டார் கெலாட். 

சச்சின் பைலட் எதிர்ப்பு:

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த அரசியல் குழப்பத்திற்கு முன்பே, சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அசோக் கெலாட் கோஷ்டியின் ஆதரவு எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டை எந்த நிலையிலும் முதலமைச்சர் பதவியில் பார்க்க விருப்பமில்லை என்று ஏற்கனவே கூறி வந்தனர். கிளர்ச்சிக்கு ஆதரவு அளித்த 102 எம்எல்ஏக்களில் யாரையேனும் முதலமைச்சராக அறிவித்தால் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சராகவே நீடிக்க விரும்புகிறாரா கெலாட்?:

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, ஒருபுறம் ராகுல்-சோனியாவின் கோரிக்கையை பின்பற்ற விரும்பாமல், தன்னை காங்கிரஸின் உண்மையான தொண்டன் என வர்ணித்துள்ளார் கெலாட். உண்மையில், கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் முதல் தேர்வாக கெலாட்டே இருந்தார். அவர் தலைவரானால் முதலமைச்சர் பதவியை இழந்திருப்பார். அதனோடு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் அழுத்தத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். 

முட்கள் நிறைந்த கிரீடம்:

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும், இந்தத் தேர்தல் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். அதே சமயம் இந்தத் தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதற்கு முழு பொறுப்பை காங்கிரஸ் தலைவர்தான் ஏற்க வேண்டும்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் அசோக் கெலாட் முட்கள் நிறைந்த கிரீடத்தை எடுக்க தயாராக இல்லை என்றே கூற வேண்டும்.

                                                                                                                     -நப்பசலையார்