இந்திய ராணுவம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பு காஷ்மீருக்குள் நுழைந்து 50 பயங்கரவாதிகளை பாகிஸ்தானிலேயே அழித்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஊரியில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணம் அடைந்த 19 ராணுவ வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது நடத்தப்பட்டது. நாட்டின் புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான், சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வியூகம் வகுப்பதில் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் ஊரியில் செப்டம்பர் 18, 2016 அன்று, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் அளித்த பாகிஸ்தான் மீதும் நாடு முழுவதும் கடும் கோபம் நிலவியது. இந்திய அரசும் அதிர்ச்சியடைந்து பதிலடி தரும் நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. இறுதியில் ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து பயங்கரவாதிகளை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைக் கடந்து சென்று அழித்தது. பயங்கரவாதிகளுக்கு அவர்களின் கூடாரங்களே கல்லறைகளாக மாறின.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பர் 28 அன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மறைந்த மனோகர் பாரிக்கர், அப்போதைய ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரது தலைமையில் நடத்தப்பட்டது.
ஊரியில் உள்ள ராணுவத்தின் பிராந்திய தலைமையகம் மீது 4 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் மற்றும் 30 வீரர்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு 10 நாட்களில், இந்தியாவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, அங்கு செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் தளங்களை அழித்தது. ஊரி தாக்குதலுக்குப் பிறகு, 28-29 செப்டம்பர் 2016 இரவு, 125 கமாண்டோக்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினர். இந்தியாவின் இந்தச் செயல், எதிரிகளின் இடத்திலேயே சென்று எதிரிகளைக் கொல்லும் துணிச்சலை உலகுக்கு உணர்த்தியது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் ஆபரேஷன் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அது ஏழு பேருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்காக கமாண்டோக்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வானத்தில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இந்த நடவடிக்கையை கண்காணித்து கொண்டிருந்தன.
125 கமாண்டோக்கள் டோக்ரா மற்றும் பீகார் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இரு படைப்பிரிவுகளிலிருந்தும் தயார்படுத்தப்பட்ட சிறப்பு கூட்டு பாரா கமாண்டோக்கள் இந்த நடவடிக்கையை அதிகாலையில் மேற்கொண்டனர். கமாண்டோக்கள் நடந்தே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்தனர்.
பாகிஸ்தான் இராணுவத்திற்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய எந்த முன்னெச்சரிக்கையும் இல்லை. விடிவதற்குள்ளாக நடத்தப்பட்ட தாக்குதலால் பாகிஸ்தான் இராணுவமும் அதன் ஆட்சியாளர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் பணியை சிறப்பாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகே அவர்களுக்குத் தெரியவந்தது.
இது குறித்து தெரிய வந்ததும் பாகிஸ்தான் அதன் போர் விமானத்தை எல்லைக்கு அனுப்பியது. ஆனால் ஏமாற்றமே. இருப்பினும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, பாகிஸ்தானின் எந்த சவாலையும் சமாளிக்க இந்தியா முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தது.
வெற்றிகரமான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு, இந்திய இராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கையை மக்கள் வரவேற்றனர். உலக அரங்கில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
பிரதமர் மோடி ஆட்சியில் நடத்தப்பெற்ற இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கே நாட்டில் நடத்தப்பெற்ற முதல் பதிலடி தாக்குதல் என பாஜக அரசு பெருமையாக பேசிக் கொண்டது. இதற்கு முன்னர் இது போன்றதொரு நிகழ்வு நடந்ததே இல்லை எனவும் கூறி வந்தனர். அதற்கு பதில் தரும் வகையில் ”இதற்கு முன்னரும் இது போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் 6 முறை நடந்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது மிகவும் அபத்தமானது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியிலும் இது போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரண்டு நடந்துள்ளன.” எனக் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.