கவர் ஸ்டோரி

காங்கிரசுக்கு இருக்கும் அக்கறை கூட அதிமுகவிற்கு இல்லையா? 10% இடஒதுக்கீடு இரட்டை வேடமா?

Tamil Selvi Selvakumar

தமிழக அரசு அறிவித்தபடி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில், பாஜகவும் புறக்கணித்து உள்ளது. 

சமூக நீதி கோட்பாட்டில் காங்கிரஸ்:

10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தேசிய காங்கிரஸ் ஆதரித்திருந்தது. இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வபெருந்தகை கலந்துக்கொண்டு, தேசிய கண்ணோட்டத்தில் காங்கிரஸ் பார்வை வேறு மாறியாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.   

யார் இரட்டை வேடம் போட்டது?:  

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. 10% இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போதே, அதிமுக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் வாக்களித்தது மட்டும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதிமுகவின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரியாததால், அவர்கள் பற்றி எந்த விமர்சனமும் எழவில்லை.

”இரட்டை வேடம் போடும் திமுக”:

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.  இதனால், பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு அதிமுக ஆதரவு  தெரிவிக்காது என்ற பேச்சு எழுந்தது. இங்கு தான் ஒரு சந்தேகம் எழுந்தது, சமூக நீதி பாதையில் பயணிப்பதாக கூறும் அதிமுக 10% இட ஒதுக்கீட்டில் எந்த நிலைப்பாட்டையும் வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது விமர்சிக்கப்பட்டது.  

சமூகநீதி அக்கறை அதிமுகவிற்கு இல்லையா?:

தேசிய அளவில் 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆதரித்தாலும் மாநில அளவில் அந்த கட்சி எதிர்ப்பையே பதிவு செய்தது. ஆனால், அதிமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் அதே சமயம், 10% இட ஒதுக்கீட்டில் சமூக நீதியைக் காக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது காங்கிரசுக்கு இருக்கும் சமூக நீதி பார்வை கூட தற்போதைய அதிமுகவிற்கு இல்லை என்ற விமர்சனத்தையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். 

சமூக நீதியா பாஜக பாசமா?:

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் கூட ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட சில விவகாரங்களில் மாறுபட்ட கருத்தையே கடந்த காலங்களில் வெளிப்படுத்தி வந்தது. அதே போலவே, 10% இட ஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழ்நாடு காங்கிரஸ் செயல்படும் என்று பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறான நிலைப்பாட்டைத் தான் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் எடுத்துள்ளது. ஆனால், நீட், இடஒதுக்கீடு கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றில் திமுக – அதிமுக இரு கட்சிகளும் கொள்கை ரீதியாக மாறுபட்டு இருந்தது இல்லை. ஆனால், தற்போது 10% இட ஒதுக்கீட்டில் அதிமுக மாறுபட்ட சமூக நீதிக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதும், அதிமுக உட்கட்சி விவகாரத்தில், பாஜக தேசிய தலைமை தலையிடுவதாலும் பாஜகவை ஒத்தே சில கொள்கை முடிவுகளை அதிமுக எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.