2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:
தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தைத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு என்பது வழங்கப்படும். முதலில் பொங்கல் பரிசு என்பது வேட்டி சேலையுடன் முடிந்துவிடும். அதற்கு பிறகு, வேட்டி சேலையுடன் இணைத்து சர்க்கரை, கரும்பு என ஒவ்வொரு பொருட்களாக இணைத்து தமிழக அரசு வழங்கி வருகிறது. அது காலப்போக்கில் மாறி தற்போது பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு என்றால் என்ன:
தைத்திருநாள் என்றாலே பொங்கல் வைப்பது தான் விஷேசம், அப்படி பொங்கல் வைப்பதற்கு அத்தியாவசிய பொருட்களான பச்சரிசி, வெல்லம், கரும்பு, சர்க்கரை, பருப்பு, ஏலக்காய் உள்ளிட்டவை தேவை. இவையெல்லாம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களாக கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு:
அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு வழங்கிய பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். அத்துடன் சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
பொங்கலுக்கு பரிசு தொகுப்பா? அல்லது ரொக்கமா?:
இந்த நிலையில், 2023-ம் ஆண்டு வழங்கவிருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, இந்த முறை பொங்கலுக்கு பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ’ஆயிரம் ரூபாய் ரொக்கம்’ கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசில் குளறுபடிகள் ஏற்பட்டதால், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கமாக கொடுக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அரசியல் அரங்கில் பேச்சுகள் எழுந்துள்ளன.