கவர் ஸ்டோரி

அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிரடி மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாகவே, தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இதனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழலாம் என்று தகவல்கள் வெளியானது.

இதனிடையே, ஆடியோ சர்ச்சையில் சிக்கிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும், அத்துடன் பால்வளத்துரை அமைச்சர் நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட சிலர் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக மூத்த தலைவரும் எம்பியுமான டி.ஆர்.பாலுவின் மகனான, டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு, தகவல் தொழில்நுட்பவியல் துறை இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சி துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ்க்கு, பால்வளத்துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் நாசர் நீக்கப்பட்ட நிலையில்,  மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பாக, ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்று கொண்ட டி.ஆர்.பி. ராஜாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.