பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
EWS ஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல மனுக்கள் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 அன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கருத்து அறிய, 1953 இல் காகா கலேக்கர் குழு அமைக்கப்பட்டு, 10% இடஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டது அப்போதே முன்வைக்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுஅதன் மீதான விசாரணை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு யு லலித் ஓய்வு பெறும் நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் மகேஸ்வரி, திரிவேதி, பர்திவாலா ஆகிய மூன்ற நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்த நீதிபதிகளின் வாதங்களை பின்வருமாறு காணலாம்.
103வது அரசியல் சீர்திருத்த திட்டம் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீறவில்லை எனக் கூறி இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு சேர்த்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் விதிப்படி இடஒதுக்கீடானது 50 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான நலனுக்காகவே இந்த ஒதுக்கீடு என்பது மறுக்கமுடியாது எனவும் 103வது சட்டத்திருத்தம் EWS என்ற தனிவகுப்பை உருவாக்குகிறது எனவும் இது அரசியலமைப்பை மீறுகிறது எனக் கூற முடியாது எனவும் கூறியுள்ளார் திரிவேதி.
தொடர்ந்து பேசிய திரிவேதி 103-வது அரசியல் சட்டத்திருத்த செல்லும் எனவும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இடஒதுக்கீடு என்பது முடிவு அல்ல எனவும் அது உள்நோக்கத்துடன் மாற கூடாது எனவும் கூறியுள்ளார்.
காலக்கெடு இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்கிக் கொண்டே இருக்க முடியாது என பர்திவாலா கூறியுள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான யு யு லலித்தும் நீதிபதி ரவீந்திர பட்டும் எதிராகவே வாதிட்டனர்.
நமது இந்திய அரசியல் அமைப்பு விதி விலக்கை அனுமதிக்காது எனவும் இந்த சட்டத்திருத்தம் சமூக நீதியின் கட்டமைப்பை குறை மதிப்பிடுகிறது எனவும் கூறியுள்ளார் ரவீந்திர பட்.
மேலும், 103-வது சட்டத்திருத்தம் அரசியல் அமைப்பு ரீதியாக பாகுபாட்டை தடை செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் சமம் என்ற சமத்துவத்தின் இதயத்தை உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குத்திக்கிழிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் முடிவில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 3-2 என்ற வித்தியாசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.