“இதுதான் சனாதனம்; தீட்டு கொள்கைதான் சனாதனம்” - திருமாவளவன் விளக்கம்

“இதுதான் சனாதனம்;  தீட்டு கொள்கைதான் சனாதனம்”    - திருமாவளவன்  விளக்கம்
Published on
Updated on
2 min read

தீட்டு கொள்கை தான் சனாதனம் எனவும், பெரியார் காலத்திலிருந்து தொடர்ந்து வழக்கில் இருக்கும் சொல்தான் என்றும்  விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.  

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மலேசியா எழுத்தாளர் வே. ராஜேந்திரன் எழுதிய "மந்திரக் கணங்கள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், கவிப்பேரரசு வைரமுத்து,  தொழிலதிபர் விஜிபி சந்தோஷம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நூலை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட  நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் மற்றும் தொழிலதிபர் விஜிபி சந்தோஷம் இருவரும் பெற்றுக் கொண்டனர்.  மேலும் இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பெண் குழந்தைக்கு "தேன்மொழி" என பெயர் சூட்டினார்

பின்னர் மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்  கூறியதாவது:-  

 "அதிகமாக மொழி உணர்வு ஏற்பட்டாலும் மொழி வெறியாக ஏற்பட்டாலும் அந்த வெறி என்பதே வெறு என்பதில் தான் தொடங்குகிறது. வெறி தான் வெறுப்பாக மாறுகிறது. பிற தேசம் பிற மொழி பிற இனத்தின் மீது வெறுப்பாக  மாறுகிறது. அமைதியை பாதிக்க செய்கிறது. 

மனித குலத்தை நெறிப்படுத்துவதற்காக தோன்றிய நிறுவனங்கள் தான் மதம். கடவுள் நம்பிக்கையிலிருந்து உருவான நிறுவனம் மதம்.   ஆன்மிகத்தை பரப்புவதற்கு உலகில் பல்வேறு இயக்கங்கள் தோன்றின. அதை சுட்டிக்காட்டும் போது தான் சொன்னேன். இஸ்லாம் சகோதரத்தை பேசுகிறது; கிருத்துவம் சகோதரத்துவத்தை பேசுகிறது.

சனாதனம் சமத்துவத்தை மறுக்கிறது; சகோதரத்துவத்தை மறுக்கிறது.  
அவையறிந்து பேசத் தெரியாதவன் அல்ல இந்த திருமாவளவன். அவை அறியாமல் பேசி விட்டதாக யாரும் எண்ணிவிடத் தேவையில்லை. அறிவு, முதிர்ச்சியுடையோர் இருக்கின்ற அவை என்ற காரணத்தினால் தான் சனாதனத்தில் சமத்துவம் இல்லை என்று சொன்னேன்",  என்றார். 

தொடர்ந்து சனாதனத்தை பற்றி பேசிய அவர், 

சனாதனம் என்பது இப்பொழுது கண்டறிந்த சொல் எனவும், பெரியார் காலத்திலிருந்து தொடர்ந்து வழக்கில் இருக்கும் சொல்தான் என்றும் கூறினார்.

பண்டிதர் காலத்தில் "ஆரியம்" என்று சொல்லப்பட்டது. பின், அம்பேத்கர்,பெரியார் காலத்தில் "பார்ப்பனியம்" என்று சொல்லப்பட்டது.
இன்றைக்கு "இந்துத்துவம்" என்ற பெயராக நிற்கிறது. இவை அனைத்தையும் ஒரே சொல்லில் குறிப்பதுதான் "சனாதனம்" என்ற சொல். 

சனாதனம் என்பதற்கு அழியாதது, நிலையானது என்று பொருள். பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றும், பெண்ணாகப் பிறந்தால் அவள் ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்றும், அவள் ஆண் இச்சைக்கு உரியவள், ஆணின் எதிர்பார்ப்புக்குரிய வாரிசுகளை பெற்றுத் தரக்கூடிய எந்திரம் என்ற பார்வை உளவியலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

சமத்துவம் என்பது சமத்துவமின்மை. பூ வைப்பது, பொட்டு வைப்பது, கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்வது,... இதுபோன்ற சடங்கு, சம்பிரதாயம் என்பது சனாதனம் இல்லை. 

எந்த சிவனும், நாராயனனும், மனித குலத்தை பாகுபடுத்திப்பார்க்க வேண்டும் என்று சொல்லவே இல்லை. அதனை பரப்புகிறவர்கள் தான் சொல்கிறார்கள்.   பரப்புபவர்களுக்கும், கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை எனவும்,, எந்த கருத்தையும் கொள்கையையும் எப்படி வேண்டுமானாலும் திருத்திப்பேசலாம்; இந்த வேலையைத்தான் மதங்கள் செய்கின்றன எனவும், கூறினார்.

பாகுபாடு சொல்லும் கருத்தியல் எந்த மதத்திலும் கூறப்படவில்லை; மேலும், தீட்டுக்கொள்கை எந்த மதத்திலும் சொல்லப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தீட்டுக் கொள்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையில் மட்டும் இல்லை ஒவ்வொரு சாதியினருக்கும் இடையில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் கருத்தியல் தீட்டு சுவர்கள் இருக்கிறது. பார்ப்பனிய பெண்கள் முதல் சூத்திர பெண்கள் வரை அனைத்து பெண்களும் சூத்திரர்கள் என்று கற்பிதம் செய்யப்பட்டு இருக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் தீட்டு இருக்கிறது அதனால் யாரும் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தொடக்கூடாது என்ற நிலை இருந்தது..Untouchability, unapproachability and unseability பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு நெருங்கினால் தீட்டு என வேறு எந்த மதத்திலும் இல்லை என கூறினார். 

தீட்டு கொள்கை தான் சனாதனம்
மூன்றாவது முக்கியமாக வேறு எந்த மதத்திலும் இல்லாதது ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று அகமண முறை எனவும், இஸ்லாம் கிறித்துவம் போன்ற மதங்களில் ஆண் பெண் பாகுபாடுகள் இருக்கிறது ஆனால் அகமன முறை என்பது கருத்தியலாக எந்த மதத்திலும் நிலைநாட்டப்படவில்லை என்றார். 

பிராமணன் என்பது வர்ணம், பார்ப்பன சமூக சாதிகளுக்கு இடையே தீட்டு இருக்கிறது.

இந்த கருத்தியல் தான் சனாதனம் இதுதான் நிலையானது மாறாதது என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதை உறுதிப்படுத்தி ஆக வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.. இதையொட்டி தான் சனாதனம் சமத்துவத்திற்கு எதிரானது என்று சொன்னதாகக் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com