வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள ஆதீனங்கள் வழங்கிய செங்கோலையும் மக்களவையில் நிறுவினார்.
64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா தேவாரப் பாடல்களுடன் தொடங்கியது. புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜை நடைபெறும் இடத்திற்கு சென்று பூஜையில் பங்கேற்றார்.
அப்போது நாடாளுமன்றத்தில் நிறுவப்படவுள்ள செங்கோலுக்கு ஆதீனங்கள் தமிழில் தேவாரம் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர். பூஜை முடிந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் முன்பு வணங்கினார். அவருக்கு தமிழ்நாட்டு ஆதீனங்கள் ஆசி வழங்கிய பின்னர் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார்கள்.
இதையும் படிக்க : அடுத்தக்கட்ட ஆளுமைகள்!
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்கு எடுத்து சென்ற செங்கோலை, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டில் பிரதமர் மோடி நிறுவினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை ஏற்றி செங்கோலுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, விழாவுக்கான கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பொறியாளர்களையும் தொழிலாளர்களையும் கவுரவித்து அவர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கிய பிரதமர், அனைத்து மத பிரார்த்தனையிலும் பங்கேற்றார். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், தோழமைக் கட்சியினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.