சந்திரிகா, ஆராய்ச்சிப் பட்டம் படிக்கும் மாணவர் இவர். ஆனால் பறை இசைதான் இவரது அடையாளம். நெடிய சிறைவாசத்திற்கு பிறகு பேரறிவாளன் விடுதலை அடைந்த போது அவரை வரவேற்கும் விதமாக இவரது குழுவினர் பறை இசைத்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவரது இணையரான ஸ்ரீநிவாஸ் மற்றும் இவர்களது தோழர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து கோவையில் நிகர் கலைக் கூடம் எனும் பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார். இங்கு மாணவர்களுக்கு பறை இசையும் வீதி நாடகங்களும் கற்றுத்தரப்படுகின்றன. நிகர் பறை இசைப்பள்ளியில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பறை இசையும் வீதி நாடகமும் பயின்று வருகின்றனர். இவை மட்டுமின்றி நிறைய மாணவர்களை பறை பயிற்றுஞர்களாகவும் உருவாக்கி வருகின்றனர்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் தற்போது பறை இசை கற்கும் ஆர்வம் வளர்கிறதா? அதில் இளம் தலைமுறையினரிடம் பறை இசை கற்றுக் கொள்ளும் ஆர்வம் எந்த அளவிற்கு இருக்கிறது?
பறை இசை கற்றுக்கொள்வதில் போன தலைமுறையினரிடம் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த தலைமுறையினரிடம் அதைபோல பெரிய தயக்கங்கள் இல்லை. எல்லா தரப்பிலிருந்தும், வேறுபட்ட சமூகத்திலிருந்தும் பறையை இசைக்க தற்போது கற்றுக்கொள்கிறார்கள். எந்த அளவிற்கு ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிறார்கள் என்றால், வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து பறை இசைக்க கற்றுக்கொள்கிறார்கள். "பறை என்பதும் ஒரு இசைக்கருவிதான். அதில் எந்த விதமான தாழ்வான விஷயமும் கிடையாது. எப்படி ஒரு கிட்டார் வாசிக்க கற்றுக்கொள்கிறோமோ அதுபோலத்தான் பறை இசைக்க கற்றுக்கொள்வதும்" எனக்கூறி பலரும் வீட்டையும் எதிர்த்து பறை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பறையில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றை இசைக்கும் முறைகள் என்னென்ன?
பறை என்பதற்கு சொல்லுதல், பேசுதல், அறிவித்தல் என்று பொருள். எல்லாத் தோல் கருவிகளுக்கும் தாய்க்கருவி பறைதான். பறைதான் வட்ட வடிவில் தோன்றிய முதல் இசைக்கருவி. பறையில் நிறைய வகைகள் உள்ளது. மற்ற இசைக்கருவிகள் எல்லாம் பறையிலிருந்து வளர்ந்து வந்தவைதான். இப்போது நாம் வாசிக்கும் பறை மட்டுமே பறை இசைக் கருவி அல்ல. பறையில் நிறைய வகைகள் இருக்கின்றன. அடக்கம், அந்தரி, அரிபறை, ஆகுலி, ஆவஞ்சி, உடல், உடுக்கை, உருமி, எல்லரி, ஏரங்கோல், ஒரு வாய் கோதை, கஞ்சிரா, கணப்பறை, கண்டிகை, கரடிகை, கல்லல், குடமுழவு, குண்டலம், கைத்தறி, கொட்டு, கோட்பறை உள்ளிட்ட 70 வகையான பறை உள்ளது. முரசு, பம்பை, செண்டை ஆகியவற்றை கூட பறை என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால், பறையிலிருந்து வளர்ந்து வந்தவைதான் இவை அனைத்தும்.
பறை இசைக்கும் முறைகளை பார்த்தோம் என்றால், ஆர்ப்ப ஒலித்தல், முழங்க ஒலித்தல், கொட்டிட ஒலித்தல், சாற்றிட ஒலித்தல், இசைப்ப ஒலித்தல், இயம்ப ஒலித்தல், விழிப்ப ஒலித்தல், விம்ம ஒலித்தல் இதைப்போல இன்னும் நிறைய முழங்கும் முறைகள் இருக்கின்றன.
ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமாக பார்க்கப்பட்ட பறை இன்று எழுச்சியின் குறியீடாக மாறியுள்ளது. இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது?
ஆதிமனிதர்கள் இந்த பறையை கண்டுபிடிக்கும்போது எந்த விதமான ஒரு சாதிய வேறுபாடும் கிடையாது. ஆனால் இடையில் வந்த சில கூட்டத்தினரால் சாதிய வேற்றுமையையும், ஒடுக்கமுறையையும் சந்தித்த மக்கள் பறையை விடாமல் இதுநாள் வரை எடுத்து வந்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நிறைய ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறார்கள். அவர்களின் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறார்கள். ஆனாலும், இந்த பறையை விடாமல் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது உள்ள தலைமுறை அவர்களிடமிருந்து அதைப்பெற்று பறையை ஒரு எழுச்சியின் குறியீடாக பார்க்கின்றனர். பறையை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை பேசக்கூடிய குறியீடாகவும், எல்லா மக்களும் சமம் 'யாரும் மேலேயும் இல்லை, யாரும் கீழேயும் இல்லை' எனும் சமத்துவத்தை பேசக்கூடிய குறியீடாகவும்தான் இளைய தலைமுறையினர் முன்வைக்கின்றோம்.
"இறப்பு வீடுகளில் பறை இசைப்பதை தடை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கை எழுகிறதே, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இறப்பு வீடுகளில் முற்காலத்தில், இறந்தவர் உண்மையாகவே இறந்துவிட்டாரா என கண்டுபிடிப்பதற்காக பறை இசைத்தார்கள். உயிர்ப்பு அடி என்ற ஒரு வாசிக்கும் முறை உள்ளது. அந்த முறையில் பறை இசைத்தும் அந்த நபர் எழுந்து நிற்கவில்லை, அவரிடம் எந்த அசைவும் இல்லை என்றால், அந்த நபர் இறந்துவிட்டார் என்று கருதியுள்ளனர். ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லை. இப்போது ஸ்டெதஸ்கோப் வரை முன்னேறியுள்ளோம். இதுமட்டுமின்றி வேறு நிறைய காரணங்களுக்காக இறப்பு வீடுகளில் பறை வாசித்தார்கள். இறப்பு நிகழ்ந்த வீடு உள்ள திசையை அறிந்துகொள்வதற்காகவும் அந்த இடத்தில் வேறு ஒரு உயிர் போய்விடக்கூடாது அதனை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் பறையை இசைத்திருக்கிறார்கள். அதைத்தாண்டி கிராமங்களில் நன்கு வாழ்ந்து வாழ்க்கையை அனுபவித்த மனிதர்களின் இறப்பை 'கல்யாண சாவு' என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்ட கல்யான சாவுகளில் மகிழ்ச்சியாக, ஒரு கொண்டாட்ட மனநிலையில் பறையை இசைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இறப்பு வீடுகளில் பறையை இசைக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை என்பதே உண்மையாகும். ஸ்டெதஸ்கோப் வந்துவிட்டது. கூகுள் மேப் வந்துவிட்டது. இவற்றால் இப்போது இறப்பு வீடுகளில் பறை இசைக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை.
இருந்தும் கூட இறப்பு வீடுகளில் பறை இசைப்பதை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், தவிர்க்கலாம். நாங்கள் இறப்பு வீடுகளில் பறை இசைப்பதை தவிர்த்து வருகிறோம். அதைப்போல பிறரும் தவிர்க்கலாம். ஆனால் கிராமத்தில் இருக்கக் கூடிய தொழில்முறை கலைஞர்களுடைய வாழ்வாதாரம் இதனை நம்பி இருக்கிறது. நிறைய இடங்களில் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள். சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள். என்றாலும் கூட, பொருளாதாரத் தேவைகள் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு இவற்றிற்கெல்லாம் ஒரு மாற்று திட்டத்தை கொண்டு வந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பறை இசை கற்றுத்தருதல், நிறைய கொண்டாட்டங்களுக்கு பறை இசையை பயன்படுத்தல் போன்ற மாற்றங்கள் வரும்போது தானாக இறப்பு வீடுகளில் பறை இசைப்பது நின்றுவிடும். இது தேவையானதாகவும் உள்ளது. அரசு இவற்றை கண்டிப்பாக செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
பறை இசையை அடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டிய அவசியம் பற்றி உங்கள் கருத்து?
டாக்டர் அம்பேத்கர் சொன்னது போல சாதி என்பது ஒரு மன நிலை. அந்த மன நிலையை மாற்ற வேண்டும் என்றால் கடந்த தலைமுறையை சேர்ந்த நபர்களிடம் இந்த கருவியின் முக்கியத்துவத்தையோ, சாதி வேற்றுமை பார்க்கக் கூடாது என்பதையோ நாம் சொல்லி புரிய வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் சாதியிலேயே ஊறி வளர்ந்தவர்கள். ஆனால் இளைய தலைமுறையினரிடம் அந்த மனநிலையே இல்லாமல் அவர்களை வளர்க்கலாம். அவர்களிடம் எல்லா இசைக்கருவிகளும் சமம் தான், எல்லா மனிதர்களும் சமம்தான் என்பதை தொடர்ந்து நாம் வலியுறுத்திக்கொண்டே வரலாம். அதைக் கேட்டு வளரும்போது கண்டிப்பாக யாரிடமும் சாதியோ, மதமோ, பாலினமோ என எந்த ஒரு வேறுபாடும் பார்க்காமல் வளர்ந்து வருவார்கள். அதுதான் இங்கு முக்கியமாக உள்ளது. சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் அது இளைய தலைமுறையினரின் கைகளில்தான் உள்ளது.
நீங்கள் எப்போது பறை வாசிக்க கற்றுக்கொண்டீர்கள்? ஒரு பெண்ணாக இருந்து பறை இசை கற்றுக்கொள்ளும் போதும் கற்பிக்கும் போதும் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை?
ஒரு பெண்ணாக நான் சந்தித்த சவால்கள் முதலில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், அடுத்ததாக குடும்பப் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் இவை இரண்டும் தான். சமூகம் சார்ந்த பிரச்சினைகள் எனும் போது, பெண்கள் எந்த வேலைக்கு போனாலும் சரி, சுற்றி இருக்கக்கூடியவர்கள் எப்பொழுதுமே மோசமாகதான் பேசுவார்கள். அணியும் உடைகளை பற்றியும், வீட்டிற்கு வரும் நேரம் பற்றியும், ஆண்களோடு பழகுவதை தவறாக சித்தரித்தும் நிறைய வசவுகளை கேட்க வேண்டிய சூழல் இருக்கும். இவை எல்லாவற்றையும் எனது அம்மா ஒரு முற்போக்கான கம்யூனிஸ்ட் என்பதால் சமாளித்துதான் என்னை வளர்த்தார். சமூகம் கக்கிய வசவுகளால், எனது அம்மாவிற்கு வருத்தம் இருந்தாலும், அவையெல்லாம் என்னுடைய ஆர்வத்தையும் பயணத்தையும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். அதற்காக எனது அம்மாவிற்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.
இன்னொரு மிகப்பெரிய சவாலாக இருந்தது குடும்ப பொருளாதாரம். நான்தான் எனது வீட்டில் முதல் பட்டதாரி. நான் தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் உயிர் வேதியியல் பிரிவில் ஆராய்ச்சிப் பட்டம் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும்போது தான் பறை இசையும் நாடகமும் எனக்கு அறிமுகமானது. இதனால் படிப்பு பாதிக்கப்படுமோ, வேலைக்கு சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது. வீட்டில் நிறைய பொருளாதார சிக்கல் இருக்கும்போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பகுதி நேரமாக வேலைக்கு போகலாம் என்று நினைத்தேன். ஆனால், என் அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை. "படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில், உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை செய்" என சொன்னார்கள்.
அம்மாவின் ஆதரவிற்காகவே நான் இளங்கலையிலும், முதுகலையிலும் வேதியியல் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்றேன். அது அம்மாவிற்கு பெரிய அளவில் மகிழ்ச்சியளித்தது. நான் முழுநேரமாக பறை இசை, வீதிநாடகம் என்று போய்விடுவேனாே என்ற பயம் அம்மாவிற்கு இருந்தது. அந்த தயக்கத்தை எல்லாம் உடைத்து நான் தங்கப்பதக்கம் பெற்றேன். தற்போது ஆராய்ச்சி மாணவராகவும் எனது படிப்பை தொடர்ந்து வருகிறேன். மேலும் பகுதி நேரமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். அது போக சனி, ஞாயிறு நாட்களில் பறை இசையை கற்பித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான தைரியமெல்லாம் நம்மை சுற்றி இருக்கக்கூடிய நிறைய சாதித்த பெண்கள் கொடுத்ததுதான். சுற்றி இருக்கக்கூடியவர்களால் பெண்கள் நிறைய சவால்களை சந்தித்தாலும் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து, அவர்களுக்கு பிடித்த ஏதோ ஒரு விஷயத்தை செய்து முன்னேறி வரவேண்டும் என பேராசைப்படுகிறேன்.
சிறையிலிருந்து விடுதலையான பேரறிவாளனுடன் இணைந்து பறை இசைத்த அனுபவம் எப்படி இருந்தது?
ஒரு பறை இசைக்கலைஞராக நிறைய இடங்களுக்கு பயணம் செய்கிறோம். அங்கு நிறைய அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான அனுபவமாக நான் பேரறிவாளன் அண்ணாவுடனும் அற்புதம் அம்மாவுடனும் இணைந்து பறை இசைத்ததை கருதுகிறேன். ஏனென்றால் 30 வருடங்களாக ஒரு தாயின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி பேரறிவாளன் அண்ணனின் விடுதலை. அந்த தருணத்தில் நானும், எனது இணையரும், எங்கள் நிகர் கலைக்கூடமும் அந்த இடத்தில் இருந்தோம் என்பதையே பெருமையாகவும், அவர்களோடு இணைந்து பறை இசைத்ததை என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியான அனுபவங்களில் முதன்மையானதாகவும் பார்க்கிறேன்.
பிற இசைக் கலைஞர்களை போல பறை இசைக்கலைஞர்களுக்கு உரிய சமூக அந்தஸ்து தரப்படுகிறதா?
பிற இசைக் கலைஞர்களை போல பறை இசைக்கலைஞர்களுக்கு உரிய சமூக அந்தஸ்து நிச்சயமாக தரப்படுவது இல்லை. இதனை ஒரு நிகழ்வு மூலம் விளக்க விரும்புகிறேன். ஒருநாள் சென்னை கடற்கரையில் இரண்டு நபர்கள் கிட்டார் கற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த இருவரும் கிட்டாரை வாசித்து பாட்டுப்பாடி கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களை சுற்றி மக்கள் கூடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து அந்த தருணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுகிறார்கள்.ஆனால், இதேபோல் பறை இசையை கற்றுக்கொண்டு இருக்கக்கூடிய இருவர் அந்த இடத்திற்கு சென்று பறை இசைத்தால் இதை அப்படியே எடுத்துக்கொள்வார்களா? மக்கள் நிச்சயம் யார் வாசித்தாலும் கொண்டாடதான் செய்வார்கள். ஆனால் ஒரு முன்தீர்மானிக்கப்பட்ட பார்வை இருக்கும். பறையை வாசிக்கக் கூடியவர்களின் தோற்றம் பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும், அணிந்திருக்கக் கூடிய உடைகள் பற்றியும் நிறைய முன்தீர்மானிக்கப்பட்ட பார்வை இருக்கும். மேலும் ஏதாவது போராட்டம் நடக்கிறதா என காவல்துறையினர் வந்து பார்ப்பார்கள். இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் வரக்கூடும்.
சமீபத்தில் கூட பறையுடன் பேருந்தில் ஏறிய பெண்ணை பேருந்தில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்கள். இதே அந்த இடத்தில் ஒரு கிட்டாரை எடுத்துக்கொண்டு சென்றிருந்தால் அதை ஒரு பெருமையாக கருதி இருப்பார்கள். ஆனால் பறையை எடுத்துக்கொண்டு போனதால், ஏன் இதையெல்லாம் பேருந்தில் எடுத்துக் கொண்டு வருகிறாய்? என்று கூறி, அப்பெண்ணை பேருந்தில் இருந்து நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார். இப்போதும் கூட பறை இசையை இழிவாக பார்க்கக் கூடிய மனநிலை மக்களிடையே இருக்கின்றது. அந்த பார்வை நிச்சயம் மாற வேண்டும். இன்னும் நிறைய பேரிடம் பறை போய் சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.
மலக்குழி மரணங்களை தீர்க்க அரசு எந்த வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இந்த காலத்திலும் மனித மலத்தை மனிதனே அள்ள வேண்டும் என்பது மனித மூளையில் உள்ள இழிவான விஷயம் அதற்காக நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டும். ஆனால், இதற்கான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற எல்லாவற்றிற்கும் நிதி ஒதுக்கும் அரசு மலக்குழி மரணங்களை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கி, அறிவியல் ரீதியான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.
மற்ற நாடுகளில் அங்குள்ள மக்களின் பிரச்னைகளை சார்ந்தும், அவர்களின் தேவைகளை சார்ந்தும் மட்டுமே, கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது. ஆனால், இந்தியாவில் பல்லாயிரம் கோடி செலவு செய்து ராக்கெட் விடும் அரசுக்கு, சக மனிதன் இன்றளவும் மலக்குழியில் மரணித்து வருகிறான், அதற்காக நிதி ஒதுக்கி, மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ என்று தோன்றுகிறது. இதற்காக நிதி ஒதுக்கி, இதை சார்ந்த கண்டுபிடிப்புகளையும் அதிகப் படுத்த வேண்டும். இனிமேலாவது கட்டப்படும் கட்டிடங்களை முறையாக பார்வையிட்டு, கழிவுநீர் வெளியேற்றத்திற்கான வழிகளை முறைப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இதுபோன்ற மலக்குழி மரணங்களை தடுக்க முடியும், இல்லையென்றால் எங்கேயாவது ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் இதுபோனற மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் உங்களது கருத்து என்ன?
வேங்கை வயலில் நடந்த அவலத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது மனித தன்மையற்ற 'ஜாதி மனநிலை' தான். "தனக்கு கீழே ஒரு கூட்டம் உள்ளது. அவர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் ஒடுக்கலாம், அடிமைப்படுத்தலாம்" என நினைத்து மனித தன்மையற்ற மிருகமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த மனித சமூகத்திற்கு அடிப்படை தேவை சாதி கிடையாது. அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் போன்றவையே மனித சமூகம் வாழ முக்கியமான தேவைகளாக இருக்கிறது. இதை சமூகத்தில் உள்ள அனைவரும் உணரும் போதுதான், இந்த மாதிரியான மனநிலை ஒழிந்து சமத்துவமான சமுதாயம் உருவாகும்.
நேர்காணல்: ச.பிரபாகரன்