முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்...இனி இவர்களுக்கான மாத ஓய்வூதியம் 1500 ஆக உயர்வு...!

முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்...இனி இவர்களுக்கான மாத ஓய்வூதியம் 1500 ஆக உயர்வு...!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்:

உலக மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் விழா நடைபெற்றது. ஓவியங்கள், நவீன உதவி உபகரணங்கள் கண்காட்சியை கலைவாணர் அரங்கில் திறந்துவைத்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கொளத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அளித்த கோரிக்கையை ஏற்று, அமைச்சர் சேகர்பாபுவிடம் உடனே செயலாக்குமாறு உத்தரவிட்டார். 

இதையும் படிக்க: பிள்ளை வரம் வேண்டி நேர்த்திகடன்...அதுவும் முக்கியமான நாளில்!

இதையடுத்து, அரங்கத்துக்குள் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், மாற்றுத்திறனாளி என்ற சொல்லை கருணாநிதி உருவாக்கி, அவர்களுக்கான சமூக நீதியைப் பெற்றுத் தந்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, வீடுகளில் இருந்தே வேலை செய்யும் சூழல் விரைவில் உருவாகும் என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ஆக உயர்த்தி அறிவித்தார். 

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுகளை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.