ஜப்பான் பயணத்தை விவரித்த முதலமைச்சர்...!

ஜப்பான் பயணத்தை விவரித்த முதலமைச்சர்...!
Published on
Updated on
2 min read

இன்று சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

மே 27 - சனிக்கிழமை :

மன்னராட்சியின் அடையாளங்களை இன்றளவும் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று. போர்ச் சூழல் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ அரசர்கள் தங்கள் தலைநகர்களை மாற்றுவது உண்டு. நம் நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் தலைநகரங்கள் பற்றி பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதுபோலவே, ஜப்பான் நாட்டில் ஒசாகாவும் ஒரு காலத்தில் தலைநகராக இருந்துள்ளது. அதன் அடையாளம் தான் பழமையான கோட்டை. அதனைப் பார்க்கச் சென்றபோது, பல நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களும் கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக வந்திருந்தனர். எங்களைப் பார்த்ததும், எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

“இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். அந்த மாநிலத்தின் முதலமைச்சர்” என்று அந்த மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் துணைவியாரிடமும் மாணவ-மாணவியர் அன்பைப் பொழிந்தனர். “உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?” என்றும் கேட்டனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுடன் படம் எடுத்து மகிழ்ந்தோம். மாணவ-மாணவியரின் ஆனந்தக் கூக்குரல், மற்ற சுற்றுலாப் பயணிகளின் பார்வையையும் எங்களை நோக்கித் திருப்பிவிட்டது.

ஒசாகா கோட்டைக்குள் ஜப்பானிய அரசர்கள் பற்றிய குறிப்புகள், மன்னர்களின் உடைகள், அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், சந்தித்த போர்க்களங்கள், ராஜமுத்திரை பதித்த கடிதங்கள், எதிரிகளாலும் இயற்கைச் சீற்றத்தாலும் கோட்டை தாக்கப்பட்டு உருமாற்றங்கள் அடைந்த விவரம் எனப் பலவும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. ஜப்பானைச் சுற்றிலும் கடல் என்பதால் பழங்காலத்திலேயே பிறநாடுகளுடன் வாணிபத் தொடர்பு இருந்துள்ளது. பண்டமாற்று முறையைக் கடைப்பிடித்துள்ளனர். தொல்லியல் ஆய்வுகள் - வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவுடன் நிறைய அளவில் பண்டமாற்று வாணிபம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்பதையும் கோட்டையில் இருந்தவர்கள் விளக்கினர். கீழ்த்திசை நாடுகள் நோக்கி கடல் வழியே சோழ மன்னர்கள் பயணித்தது நினைவில் நிழலாடியது.

கோட்டையை சுற்றிப் பார்த்தபிறகு, ஒசாகாவில் உள்ள ‘தி இந்தியன் கிளப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவுக்குப் புறப்பட்டோம். ஒரு மணி நேரப் பயணத்தில் விழா அரங்கிற்குச் சென்றோம். ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த வரவேற்பு மகிழ்வைத் தந்தது. விழாவில், தமிழர் கலை வடிவமான பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. ஜப்பான் நாட்டில் பரதநாட்டியக் கலையை முதன்முதலில் கற்றுக் கொண்டவரான அகிமி சகுராய், அதனை ஜப்பானிய மாணவியர் பலருக்கும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள் மிகச் சிறப்பாக ஆடினர். விழாவுக்கு வந்திருந்த அகிமி சகுராய் அவர்களை வாழ்த்தினேன். இந்தியன் கிளப் நிகழ்வில் குழுமியிருந்தவர்களிடம், அவர்களின் உழைப்பை, வளர்ச்சியைப் பாராட்டி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துக்கூறுங்கள் எனத் தெரிவித்தேன். எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கமாக இருந்தது.

கடிதம் தொடரும்...

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com