”தமிழ்நாட்டில் நாம் சொல்வதை...ஜப்பானியர்கள் வாழ்க்கையாகவே கடைப்பிடிக்கின்றனர்” - மு.க.ஸ்டாலின்!

”தமிழ்நாட்டில் நாம் சொல்வதை...ஜப்பானியர்கள் வாழ்க்கையாகவே கடைப்பிடிக்கின்றனர்” - மு.க.ஸ்டாலின்!

இன்று சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

மே 26 - வெள்ளிக்கிழமை : 

ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ என்றால் அந்நாட்டின் தொழில் நகரம் ஒசாகா. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து இங்குள்ள முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் இந்தப் பயணத்தில் ஒசாகாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். அங்குள்ள முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல ஃபின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.

சுறுசுறுப்பான உழைப்புக்குப் பெயர் பெற்றவர்களான ஜப்பானியர்களின் நேரம் தவறாமை மிகவும் கவர்ந்தது. திட்டமிட்ட நேரத்திற்கு மேல் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காமல் மிகச் சரியாகத் தொடங்கி, கூட்டத்தின் நோக்கத்தைச் சரியாக வெளிப்படுத்தி, சரியான நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் அவர்களின் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக, நானும் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பாக அரங்கிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஜப்பானியர்கள் அதில் மிகவும் அக்கறை செலுத்தி உழைக்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று தமிழ்நாட்டில் நாம் சொல்வதை, ஜப்பானியர்கள் வாழ்க்கையாகவே கடைப்பிடிப்பதைக் கண்டேன்.

இதையும் படிக்க : 1935 முதல் சிங்கப்பூர் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ”தமிழ் முரசு” நாளிதழ் - முதலமைச்சர்!

முதலீட்டாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு, அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவதற்கான வாய்ப்பு அமைந்தது. ஜப்பானில் பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் அன்பர் குறிஞ்சி செல்வன் மற்றும் அவர்களின் துணைவியார், தமிழ்நாட்டு உணவு வகைகளை எங்களுக்கு வழங்கினார்.  ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் திரு.நோபுஹிகோ யமாகுஜி  அவர்களுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பும் அன்றைய மதிய உணவு  வேளையில் நடைபெற்றது. ஒசாகாவில் உள்ள பழமையான கோட்டையைப் பார்க்க வேண்டும் என்று துணை ஆளுநர் கேட்டுக்கொண்டார். திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் நிறைவடைந்ததும் நிச்சயம் கோட்டைக்குச் செல்கிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். லஞ்ச் மீட்டிங்கில் தொழில் முதலீடு தொடர்பான உரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்தன.

அதன் பின்னர், ஒசாகாவில் உள்ள கோமாட்சு என்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம். கட்டமைப்புகளுக்குத் தேவையான நவீன இயந்திரங்களைத் தயாரிக்கும் கோமாட்சு நிறுவனம், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒரகடத்தில் தனது தொழிற்சாலையை அமைத்தது. 2007-ஆம் ஆண்டு நான்தான் அதனைத் திறந்து வைத்தேன். அதன் தலைமை நிறுவனம்தான் ஒசாகாவில் உள்ளது. அதன் இந்திய நிறுவனத்தின் (தமிழ்நாட்டில் உள்ளதன்) தலைவரும் அங்கு வந்திருந்தார்.  முக்கியப் பொறுப்பில் உள்ள மற்றவர்களும் வந்திருந்தனர். கோமாட்சு தொழிற்சாலையின் வாசலுக்கு கார் செல்லும்போதே, அதன் தொழிலாளர்கள் வரிசையாக நின்று கை தட்டி வரவேற்பளித்தனர். ஜப்பானிய பாரம்பரிய முறைப்படி, இரண்டு கைகளையும் முன்பக்கம் வைத்து, முதுகைச் சற்று சாய்த்து நிமிர்ந்து தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். நானும் அவர்கள் அன்பை ஏற்று, அவர்கள் மரபுப்படியே நன்றி தெரிவித்தேன்.

இதையும் படிக்க :  மே 24 ல் நடந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக எழுதிய முதலமைச்சர்...!

நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயியால் தொடங்கப்பட்டது கோமாட்சு நிறுவனம். தன்னுடைய நிலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கருவிகளை உருவாக்கத் தொடங்கி, இன்று உலகளவில் பெயர் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயந்திரமும் எப்படி தயாரிக்கப்படுகிறது, அதனுடைய உதிரி பாகங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன, எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணி எப்படி நடைபெறுகிறது என்பதை எங்களுக்கு விளக்கினர். தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.

கடிதம் தொடரும்...