டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2ஏ முதன்மை தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது.
அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 32 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக தேவர்கள் காலை முதலே வருகை புரிந்துள்ளனர். சரியாக எட்டு மணி அளவில் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் செல்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் படி காலையில் 9:30 முதல் 12 மணி வரை தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரை பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது.
முதன்மைத் தேர்வினை 27,306 ஆண்களும், 27,764 பெண் தேர்வர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 55 ஆயிரத்து71 பேர் எழுத உள்ளனர். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தனியாக தரவரிசை பட்டியலும், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன் அடிப்படையில் துறைவாரியாக காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். தமிழக அரசு துறைகளில், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்பட, 67 வகை பதவிகளுக்காற தேர்வு இதுவாகும்.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம்...!!