தலைமுடி வெட்டாததால் திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள்... தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட மாணவர்!!

Published on
Updated on
1 min read

தலைமுடி, தாடி வளர்த்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கண்ணையா - மாரிக்கண்ணு தம்பதியர். இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும், மணிமுத்து மற்றும் மாதேஷ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மாதேஸ்வரன் புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை பிரிவில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் மாதேஸ்வரன் சில நாட்களாக தலைமுடி மற்றும் தாடியை அதிகமாக வளர்த்து வந்தது பள்ளி நிர்வாகத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல முறை மாணவனை அழைத்த ஆசிரியர்கள், தலைமுடியை வெட்டி விட்டு வருமாறு கூறியும், மாணவன் கேட்டதாக தெரியவில்லை. 

இதையடுத்து பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 25-ம் தேதியன்று வழக்கம் போல மாதேஸ்வரன் தேர்வுக்கு சென்றார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் என்பவர் மாணவனை தடுத்து நிறுத்தியுள்ளார். அதிகளவில் வளர்த்த தலைமுடியை வெட்டியதோடு தாடியை ஷேவ் செய்து விட்டு வந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிப்பதாக கூறியவர், மாதேஷை விரட்டியனுப்பினார். 

தேர்வுக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதால் விரக்தியடைந்த மாணவன் மாதேஷ், வீட்டுக்கு செல்வதை விடுத்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இதற்கிடையே மாயமான மகனைத் தேடி அலைந்த பெற்றோர், காட்டுப்பகுதியில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்து போயினர். இதையடுத்து மகனின் உடலை கட்டிப் பிடித்து கதறி அழுத பெற்றோர் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தன் மாதேஷின் நண்பர்களும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்ததால் சில மணி நேரங்கள் பரபரப்பு நிலவியது. 

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பான நிலையில், மாணவனின் தற்கொலைக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com