மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்...! என்ன காரணம்..?

மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்...! என்ன காரணம்..?
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு  மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 100-க்கும்  மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார துறையில் உள்ள நிர்வாக பிரிவில் உதவி பணி தொகுதி அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட  38  பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களை, அடிப்படை பதவியான இளநிலை உதவியாளர் பணிக்கு பதவி இறக்கம் செய்வதாகவும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் மின்வாரிய தலைவரிடத்திலிருந்து அறிவிப்பு வந்துள்ளதாகவும், தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த 8 ஆம் தேதி அறிவிப்பு வந்த நிலையில், இது தொடர்பாக தங்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தும் இதுவரை எந்தவித முறையான பதிலும் கிடைக்காத காரணத்தினால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். 

மேலும் மின்வாரியத் தலைவர் இதன் பிறகு எத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசியே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தினார். பின்னர் இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு ஊழியர்களிடம் தொமுச தொழிற்சங்க தலைவர், வலியுறுத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக இந்த போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் தமிழ்நாடு மின் துறையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். மின்வாரியத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட,  பொருட்கள் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துதல், டெண்டர் விடும் பணியை முறையாக செய்வது, குறைந்த அளவில் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டாலே மின்துறை வாரியத்தை லாபத்தில் இயக்கலாம் என தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com