மநீம கட்சியைச் சார்ந்தவர்களுக்கு விருந்தளிக்கும் விழாவில் பேசிய கமல்ஹாசன், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்ரா:
இந்தியாவை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் அந்த நடைபயணத்தில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விருந்தளிக்கும் விழா:
இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சார்ந்த 300 பேருக்கு விருந்தளிக்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கின்றது, அதனை நாம் எதிர்க்க வேண்டும். அதனால் தான், மதத்திற்கு எதிரான அரசியலை தடுத்து, ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் நாம் அனைவரும் கலந்து கொண்டோம் என்று கூறினார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு:
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தவர், மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அண்ணா என்பது பெயர் அல்ல உறவு என்றும் கூறியுள்ளார்.