ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? - சீமான் கண்டனம்!

ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? - சீமான் கண்டனம்!
Published on
Updated on
2 min read

பட்டியலினப்பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் மெத்தனப்போக்கு:

தமிழ்நாடு அரசை கண்டித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின் குடிநீர்த்தொட்டியில் மனித மலத்தை சாதிவெறியர்கள் கலந்த கொடுஞ்செயல் தொடர்பான செய்தி வெளியாகி, ஒரு வாரத்தைக் கடந்தும் இன்றுவரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யாதிருக்கும் திமுக அரசின் செயல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. சமூக நீதி ஆட்சியென நாள்தோறும் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, தமிழ்நாட்டையே உலுக்கிய இக்கோரச்சம்பவத்தில் தொடர்புடைய சாதிவெறியர்களைக் கைதுசெய்யாது மெத்தனப் போக்கோடு நடந்துகொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்துரோகம்:

எல்லோருக்குமான ஆட்சியெனத் தற்பெருமை பேசும் திமுக அரசு, இக்கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையோ, நியாயத்தையோ பெற்றுத்தராது, குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றத் துணைபோவது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யப்படும் ஜனநாயகத்துரோகமாகும். 

கேள்வி எழுப்பிய சீமான்:

நாடறியப்பட்ட ஒரு கொடுங்கோல் சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீதே கைது நடவடிக்கையை மேற்கொள்ள திமுக அரசு தயங்குகிறதென்றால், எவ்வளவு பெரிய மோசடித்தனம் இது? இதுதான் பெரியார் வழியிலான விடியல் ஆட்சியா? இதுதான் சமத்துவத்தை நிலைநாட்டும் இலட்சணமா? இதுதான் திமுகவின் சாதி ஒழிப்புச் செயல்பாடா? அக்கொடும் நிகழ்வு நடைபெற்று ஒரு வாரமாகியும்கூட ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், துணைநிற்கவும் அக்கிராமத்திற்குச் செல்லாததேன்? இதுதான் சமூக நீதியைப் பேணிக்காக்கும் அரும்பணியா? முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம், கிளாமங்கலத்தில் இரட்டைக்குவளை முறையைப் பின்பற்றி, தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்களும் கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் திமுக அரசின் பொறுப்பற்றத்தனத்தையும், சாதிய மேலாதிக்கத்துக்குத் துணைபோகும் சந்தர்ப்பவாத அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்: 

ஆகவே, அடையாள அரசியல் செய்வதையும், காட்சி அரசியல் செய்வதையும் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்வைத்து இனியாவது செயலாற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com